தேவா தேவா
சினிமா

தேவாவின் பக்திப் பாடல் சாம்ராஜ்யம்.. பலரும் அறிந்திடாத பக்கம்

கானா பாடல்களால் இளைஞர்களைத் துள்ளாட்டம் போட வைத்து, மெலோடிகளால் மனங்களை மயக்கி தனி சாம்ராஜ்யம் படைத்த தேவாவின் இசைப் பயணத்தில், பலரும் அறிந்திடாத பக்திப் பாடல்களுக்கும் தனி இடம் உண்டு.

PT WEB

கானா பாடல்களால் இளைஞர்களைத் துள்ளாட்டம் போட வைத்து, மெலோடிகளால் மனங்களை மயக்கி தனி சாம்ராஜ்யம் படைத்த தேவாவின் இசைப் பயணத்தில், பலரும் அறிந்திடாத பக்திப் பாடல்களுக்கும் தனி இடம் உண்டு.

தேவாவின் கரகர குரல் வெறும் கானாவை மட்டும் விட்டுச் செல்லவில்லை. நமக்கே தெரியாமல் நம் வீடுகளிலும் திருவிழாக்களிலும் பக்தி இசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களையும் விட்டுச் சென்றிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா..?அதில் ஒன்றுதான் காரியங்கள் நிறைவேற்றும் கணபதியே என்ற பாடலும்.

தேவா

கானா பாடல்களின் துள்ளலிலும், காதல் பாடல்களின் இனிமையிலும், கிராமிய இசையின் உயிர்ப்பிலும் ரசிகர்களைக் கட்டிப்போட்ட தேவா, ஆடி மாதத்தை அலங்கரிக்கும் அம்மன் பாடல்களுக்கும் இசையமைத்து உருக வைத்திருக்கிறார். உதாரணத்திற்கு, மாரி முத்துமாரி, வெள்ளிமலை கண்ணாத்தா, மருவத்தூர் ஓம் சக்தி, தாலிவரம் கேட்டு வந்தேன், ஆத்தா உன் கோயிலிலே, ஸ்ரீரங்க நாதருக்கு தங்கச்சியம்மா போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

அம்மன் பாடல்கள் பலவற்றில் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலுக்கு மெருகேற்றியிருப்பதே தேவாவின் இசைதான் என்றால் மிகையாகாது. மகமாயி சமயபுரத் தாயே, ஆத்தா பெரிய பாளையாத்தா போன்ற பாடல்களில் அதன் தனித்துவத்தை தெளிவாக நம்மால் காண முடியும்.

கிராமப்புறங்களில் கோயில் திருவிழாவின்போது, முளைப்பாரி உற்சவத்தில் கும்மியடிக்கும்போது பாடப்படும் ஒன்னாம் படி எடுத்து பாடலுக்கு மெட்டமைத்து இசையூட்டியது தேவாவின் விரல்கள்தான்...

வெறும் இசைமட்டுமா... அவரது குரலும் முரண்டு பிடிக்காத முண்டகக் கண்ணி அம்மா, மேற்கு சீமையில என பல பக்தி பாடல்களுக்கு உணர்ச்சியூட்டிருக்கிறது...

தலைநகருக்குச் சொந்தமான கானாப் பாடல்களோடு, கலைநகருக்கு சொந்தமான கள்ளழகர் பாடலையும் தேவாவின் குரலும் இசையும்தான் நமக்கு தந்துள்ளது.

தேவாவின் குரல், கானாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கலையுலகத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று எதுவும் தேவையில்லை..