தேவா தேவா
சினிமா

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று தேவா நல்லடக்கம்! 1 மணிவரை பொதுமக்கள் அஞ்சலி!

மறைந்த திரைப்பட இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் பூத உடல் இன்று அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

Rishan Vengai

மறைந்த இசையமைப்பாளர் தேவா அவர்களின் உடல் இன்று மாலை சக்கரமல்லூரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தும் நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ரங்கநாதர் கோவில் அருகே வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படும்.

மறைந்த திரைப்பட இசை அமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் உள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தேவா

அரசு மரியாதையுடன் மூன்று சுற்றுகளாக ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் என 24 காவலர்கள் 72 குண்டுகள் முழங்க, தேவா அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் சக்கரமல்லூரில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தேவா அவர்களின் பூர்வீக கிராமமான பழைய மாங்காடு கிராமத்தில் கிராம மக்களின் அஞ்சலிக்காக அவர் கட்டிக் கொடுத்த ரங்கநாதர் கோவில் அருகே சிறிது நேரம் வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்ய உள்ள சக்கரமல்லூருக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்.

தேனிசைத் தென்றல் தேவா

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சுமார் 5000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் அவர்களின் தலைமையில் 250 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நேற்று இரவு முழுவதும் ஆற்காட்டில் கனமழை பெய்ததன் காரணமாக, அவரது உடல் அடக்கம் செய்ய உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.