ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்குப்பின், ஒரு விஷயம் தனக்கு ஏமாற்றமளித்துள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அந்த விஷயம் என்னவாக இருக்கும்? ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது? எனப் பல கேள்விகள் எழுந்தன. இதனிடையே, ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசிய விவரங்கள் தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், ரஜினிகாந்தின் ஏமாற்றத்துக்கு முக்கிய காரணமாமே, முதலமைச்சர் பதவிதான் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடலாம் எனக்கூறிய நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியளித்த ரஜினி, தனது விருப்பம் ஒன்றைக் கூறி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறார். எதிர்காலத்தில் ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால், தான் முதலமைச்சராக பதவி ஏற்கப்போவதில்லை என்றும், கட்சியின் தலைமைப் பொறுப்பை மட்டுமே வகிக்கப்போவதாகவும் அவர் கூறியது நிர்வாகிகளை குழப்பமடையச் செய்துவிட்டது. இல்லையென்றால், கூட்டணி கட்சியில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தலாமா என்றும் கருத்து கேட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால், அதற்கு நிர்வாகிகளிடம் இருந்து ஒருமித்த பதில் வரவில்லை.
மேலும், ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாதது, கொடுக்கப்பட்ட வேலைகளை சில மாவட்டச் செயலாளர்கள் முறையாக செயல்படுத்தாதது உள்ளிட்ட விவகாரங்கள் ரஜினிக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான சூழலில், கூட்டணி அமைத்தால் அதில் யாரெல்லாம் இணைய வாய்ப்புள்ளது என்பது குறித்த ஆலோசனை தொடங்கியிருக்கிறது. அதில் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி வைக்கப்பட வேண்டுமென நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய கட்சியுடன் நல்லுறவு வேண்டும் என்றே ரஜினிகாந்தும் விரும்புவதாகத் தெரிகிறது.
பல கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், அதைத் தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி நிர்வாகிகளுக்கு அவர் நம்பிக்கையூட்டியிருக்கிறார். முதல்வர் வேட்பாளராக வேறொருவரை முன் நிறுத்தலாம் என ரஜினி கூறியதையும் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஒருவேளை கூட்டணிக் கட்சி வேட்பாளரை முன்னிறுத்தினால், அதில் இடம்பெறும் பிற கட்சிகள் அதனை ஏற்குமா என்பது மாபெரும் கேள்வி என நிர்வாகிகள் தரப்பில் இருந்து பதில் வந்திருக்கிறது. இந்த விஷயங்கள் தான் ஏமாற்றத்துக்கு காரணமா என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும். நிர்வாகிகளுடனான ஆலோசனையில் ரஜினிகாந்துக்கு ஏமாற்றமோ இல்லையோ? அவரை நம்பி கால் நூற்றாண்டாக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துவிடக்கூடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.