நல்ல படங்கள் ஓடாமல் போவதும், கண்டுகொள்ளாமல் விடப்படுவதும் தமிழ் சினிமாவில் சகஜமாக நடக்கும் விசித்திரங்கள். மார்ச் மாதம் ஊரடங்கால் ஊரெல்லாம் தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. 2020 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்கள் வெளியான படங்களில் சில மட்டுமே அமோக வரவேற்பைப் பெற்றன.
அந்த வரிசையில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் வருகிறது. படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டுப் பாராட்டியிருப்பதுதான் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்குக் கிடைத்த கொரோனா காலத்துக் கொடையாக மாறியிருக்கிறது.
இதுபற்றி ட்விட்டரில் மிகுந்த உற்சாகத்துடன் எழுதியுள்ள பெரியசாமி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை அங்கீகரித்துள்ளதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாராட்டுவதால்தான் ரஜினிகாந்த் சந்திரனுக்கு மேலே இருக்கிறார் என்றும் நெகிழ்ந்துள்ளார்.
என்ன சொன்னார் சூப்பர்ஸ்டார். “சூப்பர்ர்ர்… அற்புதம்… ஹாஹாஹா… உண்மையில் நான் பழைய. காலத்துக்குப் போய்விட்டேன். வாழ்த்துகள். பெரிய எதிர்காலம் உங்களுக்கு” என்று வாழ்த்தியுள்ளார்.
பாராட்டு மழையில் நனைந்த இயக்குநர் பெரியசாமி, “காலையில் இருந்து இது மட்டும்தான் கேட்டுக்கிட்டு இருக்கு. காத்துல பறந்துக்கிட்டே இருக்கேன். கடவுளே நன்றி. இந்த நாளுக்காக காத்திருந்த அனைவருக்கும் நன்றி” என்று ஆனந்தம் பொங்க பதிவிட்டுள்ளார்.