- செ.யுகேஷ்
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹாரர் திரில்லர் படமான டிமான்ட்டி காலனி 3 -ன் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
டிமான்ட்டி காலனி படத்தின் முதல் பாகம் 2015ல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2024-ல் டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு வெளியிட்ட நிலையில், அப்படம் உலகளவில் 85 கோடி ரூபாய் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படத்தின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
இந்தசூழலில் தான், டிமான்ட்டி காலனி படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தையும் உருவாக்கியுள்ளது. டிமான்ட்டி காலனி 3 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கடந்த மாதம் படக்குழு தெரிவித்த நிலையில், இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஜோக்கர்,குடும்பஸ்தன் போன்ற திரைப்படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் இப்படத்தில் LIBRARIAN கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.