தீபிகா படுகோனே சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதற்காக புகைப்படங்கள் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன.
தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘பத்மாவத்’. வரலாற்று கதையை பின்புலமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு மிக கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. ஆகவே தணிக்கைக் குழு சில விஷயங்களை மட்டும் படத்தில் இருந்து மாற்ற வலியுறுத்தியது. அதன்படி இதன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தின் தலைப்பான ‘பத்மாவதி’ என்பதை ‘பத்மாவத்’என மாற்றம் செய்தார். இருந்தும் ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயிலில் தீபிகா படுகோனே சாமி தரிசனம் செய்துள்ளார். தடைகளை மீறி படம் வெளியாக உள்ள நிலையில் அவரது சாமி தரிசனம் மிக முக்கியமானதாக அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இக்கோயிலுக்கு அவர் வருகை தந்த போது மிக கடுமையான போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது. அவர் மிக இயல்பான உடையில் கோயிலுக்கு வந்திருந்தார். வெண்மையான சல்வார் அணிந்திருந்த தீபிகாவைக் காண பெரும் கூட்டம் அங்கு குழுமியிருந்தது. அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.