’சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமண் வெட்டியதை போல, தீபிகா படுகோன் மூக்கை வெட்டுவோம்’ என்று கர்னி சேனா என்ற அமைப்பு விடுத்த மிரட்டலை அடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கியுள்ள இந்தி படம், ’பத்மாவதி’. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படம், ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் வரலாற்றை தவறாகச் சித்தரித்து இருப்பதாக ராஜபுத்திர சமூகத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இந்நிலையில், 'பத்மாவதி வெளியாவதை, யாராலும் தடுக்க முடியாது' என, தீபிகா படுகோன் கூறியிருந்தார். இதற்கு, ராஜபுத்திர கர்னி சேனா என்ற அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அந்த அமைப்பின், தலைவர் அனுப்பியுள்ள வீடியோவில், ‛சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் வெட்டியது போல, நாங்கள் தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்' என மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து தீபிகாவுக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மும்பை உயர் அதிகாரி தேவன் பார்தி கூறியுள்ளார்.