அதிக உயரம் கொண்ட கிரேன்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதே ‘இந்தியன்2’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்துக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. அது சரி, விபத்து எப்படி நடந்தது?
சென்னை பூந்தமல்லி அருகே ‘இந்தியன்2’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘இந்தியன்2’படப்பிடிப்பில் உடைந்து விழுந்த கிரேன் துறைமுகத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது. வழக்கமாக சினிமாக்களில் 40 அடி உயரத்திற்கு பயன்படுத்தக்கூடிய கிரேன்களையே அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், ‘இந்தியன்2’படப்பிடிப்பிற்காக பயன்படுத்திய பிரம்மாண்ட கிரேன் 200 அடி உயரம் வரை உபயோகிக்க முடியும். வெயிட்லோடில் செய்த மனித தவறே இந்த விபத்திற்கு அடிப்படைக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
சினிமா சூட்டிங்கில் 6 அடி, 10அடி, 20அடி, 40 அடி உயரம் கொண்ட கிரேன்களே பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கிரேன்கள் டிராலி மூலம் இயக்கப்படும். டிராலி மூலம் இயக்கப்படும் கிரேன்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. 40 அடி உயரம் கொண்ட கிரேனை பொது இடங்களில் பயன்படுத்த விரும்பினால், படப்பிடிப்பு நடத்த காவல்துறையினரிடம் அனுமதி வாங்கும் போது இந்தவகை கிரேன்களைதான் பயன்படுத்தவுள்ளோம் என்பதை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இயக்குநர்கள் சட்டவிரோதமாக 40 அடிக்கு மேல் உயரம் கொண்ட கிரேன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பகல் காட்சியை இரவில் படமாக்கும் வகையிலேயே ‘இந்தியன்2’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இதனால் அதிக விளக்குகளை பயன்படுத்தவே 200 அடி உயரம் கொண்ட கிரேன்களை உபயோகப்படுத்தியதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவை பெரிய பட்ஜெட் படங்களில் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கிரேனில் அதிக எடை கொண்ட விளக்குகளை வைத்ததும், பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுமே இந்த விபத்துக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.