கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்பேத்கரிய செயற்பாட்டாளரும் நடிகருமான வீரா சதிதார் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் சைதன்ய தம்ஹானே இயக்கத்தில் வெளியான ‘கோர்ட்’ சிறந்த திரைப்படமாக தேசிய விருதை பெற்றதோடு, கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்த இப்படத்தில் ’நாராயண் காம்ப்ளே’ என்ற கதாபாத்திரத்தில் தெருப்பாடகராக கதையின் நாயகனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளைக் குவித்தார் நடிகர் வீரா சதிதார். படத்தில் மட்டும் புரட்சி பேசாமல் நிஜத்திலும் மகாராஷ்டிர மாநில அம்பேத்கரிய இயக்கங்களிலும் இந்திய மக்கள் நாடக சங்கத்திலும் தீவிரமாக பணியாற்றி வந்தவர் பல்வேறு புரட்சிகர கவிதைகளை எழுதியுள்ளார்.
இந்நிலையில், நாக்பூரிலுள்ள மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதுகுறித்து, ‘கோர்ட்’ திரைப்படத்தின் இயக்குநர் சைதன்ய தம்ஹானே “வீரா சதிதார் கவிஞர், சமூக செயற்பாட்டாளர், நடிகர் மட்டுமல்ல, நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்” என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.