இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ திரைப்பட டீசர் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறிவருகிறது.
மாறுபட்ட கதைக்களங்களில் படம் எடுக்கும் பாலாவின் அடுத்த படமான ‘நாச்சியார்’ குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நாச்சியாரில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ‘நாச்சியார்’ பட டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. டீசரின் இறுதியில் ஜோதிகா உச்சரிக்கும் ஒற்றை வார்த்தை தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இது சமூக வலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டீசரில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள அதனை பார்ப்பவர்களும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள ஜோதிகா, நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டியில் கூட, “ஏகப்பட்ட பெண்கள் திறமையுடன் உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற நல்ல கதைகளை உருவாக்குங்கள். பெண்களும் நிறைய சாதிக்கட்டும்” என கூறியிருந்தார்.
தொடர்ச்சியாக பெண்களை உயர்த்தி பிடிக்கும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆசைகாட்டும் ஜோதிகா, இந்த ஒற்றை வார்த்தையை ஏன்தான் பேசினார் என அவரது ரசிகர்களும் சற்று வருத்தம் அடைந்துள்ளனர். இதனிடையே, பாலா படம் என்றால் அப்படிதானே. இதற்கு மேல் அதில் என்ன எதிர்பார்க்க முடியும் என ஒரு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற சிலேரா, ஜோதிகா பேசியதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை என்றபடியும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.