பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை கதையை கொண்ட படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை கதை, ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. மேரி கோம், சர்ப்ஜித் ஆகிய வாழ்க்கை கதைகளை இயக்கிய ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடிக்கிறார். மனோஜ் ஜோஷி, அமித் ஷாவாகவும் போமன் இரானி, ரத்தன் டாடாவாகவும் ஷரினா வகாப் மோடியின் தாயாகவும் பர்கா பிஸ்ட் செப்குப்தா மோடியின் மனைவியாகவும் நடிக்கின்றனர்.
மோடியின் கடந்த கால வாழ்க்கையில் தொடங்கி அவர் குஜராத் முதல்வராகவும், பின்னர் 2014 தேர்தலில் இந்திய பிரதமராகும் வரையுள்ள நிகழ்வுகளை இந்தப் படம் கொண்டுள்ளது. இந்தப் படத்தை ஜனவரி 7ஆம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தொடங்கப்பட்டது. இப்போது ஷூட்டிங் முடிந்து, ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காகவே இந்தப் படம் வேகம் வேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். தேர்தல் தொடங்கும் நிலையில் இப்படம் வெளியிடுவதற்கு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, இந்தப் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தேர்தலை நோக்கமாக கொண்டு, பிரசாரத்துக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் நேரத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.