பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் சொன்ன நடிகை மீது படத் தயாரிப்பாளர் வழக்கு தொடுத்துள்ளார்.
கன்னடத்தில் வெளியான ரங்கி தாரங்கா, கல்பனா 2 படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அவந்திகா ஷெட்டி. இவரை ’ராஜூ கன்னடா மீடியம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, அவந்திகா திடீரென்று நீக்கப்பட்டார். ’படப்பிடிப்புக்கு வரவில்லை. வேண்டும் என்றே படக்குழுவிடம் தகராறு செய்கிறார். யார் பேச்சையும் கேட்பதில்லை. டார்ச்சர் அதிகமாக இருந்தாதால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டோம்’ என்று சுரேஷ் கூறியிருந்தார். ஆனால் அவந்திகா, தயாரிப்பாளர் சுரேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் அதை எதிர்த்ததால், படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் டிவிட்டரில் கூறியிருந்தார். என்னை போல் வேறு யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது என்பதால் இதை வெளியே தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், ’அவந்திகா செய்த டார்ச்சரால்தான் அவரை படத்தில் இருந்து நீக்கினோம்.
அவர் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது’ என்றார். இதையடுத்து அவந்திகா மீது பெங்களூர் கோர்ட்டில்
நேற்று வழக்கு தொடர்ந்தார்.
‘எனது படம் தாமதம் ஆனதற்கு அவந்திகாதான் காரணம். படப்பிடிப்பின் போது தங்கும் ஓட்டலில் இருந்து, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் டார்ச்சர் செய்தார். அவர் 40 நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்க வேண்டும். 25 நாட்கள் மட்டுமே கலந்துகொண்டார். அவரால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை கேட்டால்ஆதாரமில்லாத பாலியல் புகாரை கூறியிருக்கிறார்’ என்று அந்த மனுவில் சுரேஷ் கூறியுள்ளார்.