’இட்லி கடை’ திரைப்படத்தை முடித்த கையோடு ’தேரே இஷ்க் மே’ என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்க தயாராகிவருகிறார் நடிகர் தனுஷ். இப்படங்களை தொடர்ந்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவிருக்கும் அவர், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
அப்துல் கலாமை வழிகாட்டியாக பல இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பின்தொடர்ந்து வரும் நிலையில், அவரின் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு ’கலாம்: தி மிஸ்ஸைல் மேன் ஆஃப் இந்தியா’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ’ஆதி புருஷ்’ படத்தை இயக்கிய எம்.ராவத் டைரக்ட் செய்யவிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு கலாம் பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கான அனுமதியை வழங்ககூடாது எனவும் சமூக ஆர்வலர் ஒருவர் தணிக்கை குழு வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.
இயக்குநர் எம்.ராவத் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பயோபிக் திரைப்படத்திற்கு ’அப்துல் கலாம்’ என்றபெயரை வைக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய தணிக்கை குழு வாரியத்தில் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம் புகார் அளித்துள்ளார். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தணிக்கை குழு வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், “எம்.ராவத் இயக்கத்தில் தமிழகத்தில் புகழ்பெற்ற நடிகராக திகழும் தனுஷ் அவர்கள் நடித்து வரும் திரைப்படத்திற்கு ’கலாம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பெயரை வைக்க நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
தற்போது தமிழக சினிமா துறையில் சிறு மற்றும் பெரும் நடிகர்வரை, சமூகத்தில் உள்ள தலைவர்கள் பெயர் மற்றும் அரசியல்வாதிகள் பெயரை கெடுக்கும் வண்ணத்திலும், போதை பொருட்களை ஆதரிக்கும் வண்ணத்திலும், கொலை கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடும் வகையிலும் நடித்துவருகின்றனர். இப்படியான சினிமாவை பார்த்து பல இளைஞர்களும் சீர்கெட்டு வருகிறார்கள்.
இந்த சூழலில் தற்போது முன்னாள் ஜனாதிபதியான ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரை கெடுக்கும் வகையில், நடிகர் தனுஷ் மற்றும் ஆதி புருஷ் படத்தின் இயக்குனர் எம்.ராவத் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் சமூக வலைதளங்களில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-த்தின் அடிப்படையில் ஒரு படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பானது. அதுவும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி தலைவர்கள் பெயரை அவதூறாக சித்தரிக்கும் வண்ணத்திலும் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.
முன்னாள் ஜனாதிபதியும் நாடு முழுவதும் போற்றப்பட்டு வரும் தலைவருமான அப்துல் கலாம் ஐயா அவர்கள் பெயரை படத்திற்கு வைப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் இந்த காலத்தில் அவர்கள் பெயரை வைத்து ஏதேனும் சிறு காட்சிகள் தவறாக இடம்பெரும் வண்ணத்தில் இருந்தால், அது அவரின் பெயரை கெடுக்கும் வண்ணத்தில் இருக்கும். ஆகையால் முன்கூட்டியே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் பெயரை படத்திற்கு வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் சட்டத்திற்கு புறம்பாகவும் அல்லது மீரும் பட்சத்தில், சாட்சிய சட்டத்தின் படி அவர்கள் தவறை தானாக ஒப்புக்கொண்டதாக கருதி, அவர்கள் மீது மான நஷ்டஈடு வழக்கு மற்றும் படத்தை தடைவிக்க நீதிமன்றத்தில் அணுக இதுவே போதுமான ஆவணம் ஆகும் என இந்த மனுவின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.