சினிமா

டி.ராஜேந்தர் நலம்பெற வேண்டி நடிகர் கூல் சுரேஷ் அங்கப்பிரதட்சணம்

kaleelrahman

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் டி.ராஜேந்தர் நலம் பெற வேண்டி காமெடி நடிகர் கூல் சுரேஷ் அங்கப்பிரதட்சணம் செய்தார்.

திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார்.

இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகரும் அவரது ஆதரவாளருமான காமெடி நடிகர் கூல் சுரேஷ் திருவண்ணாமலை கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து எலுமிச்சை பழத்தில் நெய் விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக டி.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லவிருப்பதாக அவரின் மகனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான சிம்பு என்கிற சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.