சினிமா

இதுதான் சுப்ரமணி, கவுண்டமணியான கதை!

webteam

தமிழ் சினிமாவின் காமெடி பரம்பரையில், கவுண்டமணிக்கான இடத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தனது நய்யாண்டி, நக்கலால் ரசிகர்களைக் கதற கதற சிரிக்க வைத்தவர். அவர் பேசிய, ’பத்தவச்சிட்டியே பரட்டை’யும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா’வும் ‘உலக நடிப்புடா சாமி’, ’பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா’வும் அவ்வளவு எளிதாக மறந்துவிடக்கூடியதல்ல!

தமிழ் சினிமாவில் பல படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை எவ்வளவு முக்கியமாக இருந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் இவர் காமெடிக்கும் இருந்தது! 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து நடித்த காமெடிகள்  அனைத்தும் ஹிட். 

சேனல்கள் வராத காலத்தில், தமிழகத்தின் லாரல் -ஹார்டி என புகழப்பட்ட இந்த காமெடி ஜோடிகளின் லூட்டிகள்தான், தமிழர்களின் ஒரே என்டர்டெயின்மென்ட்! இதற்கு சாம்பிளாக, பல படங்களின் காமெடியை சொல்ல முடியும். ஒரு சாம்பிள், ’கரகாட்டக்காரன்’ படத்தில் வரும்
வாழைப்பழ காமெடி. 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள வல்லக்கொண்டபுரம் கிராமத்தில் பிறந்தவர் சுப்ரமணி. சினிமாவுக்கு வரும் முன் உள்ளூ ரில் நாடகங்களில் நடித்த போது, இவர் கொடுக்கும் கவுன்டர்களால், சிரித்து சின்னா பின்னமாவார்கள் சக நடிகர்கள். இதனால் சுப்ரமணியை, கவுன்டர் மணி என்று அழைக்க, அதுவே, கவுண்ட மணியாக மாறிவிட்டது. இந்த மாற்றத்துக்கும் இருக்கிறது ஒரு கதை!

’16 வயதினிலே’ படத்தில் கவுன்டர் மணியின் பெயரை டைட்டிலுக்காக எழுதி கொடுத்தவர், அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.பாக்கியராஜ். கவுன்டர் மணியை, கவுண்டமணி என்று அவர் எழுதிவிட, அப்படியே வந்துவிட்டது, படத்தின் டைட்டில் கார்டில்! பிறகு அந்த
பெயரே நிலைத்துவிட்டது. 

’’கவுன்டர் செட்டில் இருந்தால் அவ்வளவு கலகலப்பாக இருக்கும். எவரையும் விட்டுவைக்க மாட்டார். அவர் கேசுவலாகத்தான் பேசுவார். நமக்குத்தான் சிரிப்பு அள்ளும்’’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.

காமெடியனாக மட்டுமல்லாமல், குணசித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ள கவுண்டமணி, ’பணம் பத்தும் செய்யும்’ உட்பட 12 படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து
நடித்துள்ள கவுண்டமணி, ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படங்கள், ’49 ஓ’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’!

சக மனிதர்களைப் போலவே, பத்திரிகையாளர்களிடம் அன்பாக பேசுவார் கவுன்டர். அவரது தி.நகர் அலுவலகத்துக்குச் சென்றால் பல கதை களைச் சொல்வார், சிரிக்க சிரிக்க. ஆனால், பேட்டி என்று இழுத்தால் மட்டும், ’அட அதெல்லாம் வேண்டாம்’’ என்று மறுத்துவிடுவார்
செல்லமாக! ‘என்னத்த சாதிச்சுட்டோம்னு பேட்டி’ என்பார். இதுதான் இந்த சாதனை மணியின் எளிமை!

கவுன்டர் காமெடிகள் இணையத்தில் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. ஏனென்றால் மீம் கிரியேட்டர்களின் பேவரைட் அவர்! அவருக்கு இன்று பர்த் டே!

வாழ்த்துக்கள் கவுண்டரே!