சினிமா

”சக காமெடி நடிகர்கள் வளர வேண்டும் என நினைத்தவர் விவேக்” - நகைச்சுவை நடிகர்கள் புகழஞ்சலி

”சக காமெடி நடிகர்கள் வளர வேண்டும் என நினைத்தவர் விவேக்” - நகைச்சுவை நடிகர்கள் புகழஞ்சலி

sharpana

நடிகர் விவேக் மறைவிற்கு சக நகைச்சுவை நடிகர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு, அவர் குறித்த நினைவுகளை பகிந்துகொண்டுள்ளனர். 

மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணி அளவில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் நினைவு இழந்த நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில, இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிர் பிரிந்தது. இந்நிலையில், அவரது இல்லத்தில் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சக நகைச்சுவை நடிகர்கள் ’பவர்ஸ்டார்’ சீனிவாசன், வையாபுரி, ஆர்த்தி-கணேஷ், லொல்லு சபா சாமிநாதன், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், மதுமிதா, யோகிபாபு, எம்.எஸ் பாஸ்கர், சார்லி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திவிட்டு நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். 

நகைச்சுவை நடிகர் வையாபுரி : “விவேக் சார் மறைந்துவிட்டார் என்பது உலகத் தமிழர்கள் யாராலுமே நம்ப முடியாதது. ஏனென்றால், ஒரு கல்லூரி மாணவர் போல இளமையாக இருந்தார். கொரோனா தடுப்பூசி போட வரும் போதுக்கூட துடிப்புடன் காணப்பட்டார். நான் முதன்முதலாக அவர் காம்பினேஷனில்தான் நடித்தேன். முதன் முதலில் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றதும் அவரால்தான். எப்படி டைமிங்காகவும் ரைமிங்காகவும் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுத்ததும் அவர்தான். அவருடன் 40 படங்கள் நடித்திருக்கிறேன். சக நகைச்சுவை நடிகர்களின் வளர்ச்சியை விரும்பியவர். சமூகத்திற்கே பேரிழப்பு” என்று உருக்கமுடன் பேசினார்.

நகைச்சுவை நடிகர் ஆர்த்தி-கணேஷ் : ”விவேக் சார் மிகவும் பாசிட்டிவானவர். கடைசிவரை சமூகத்திற்காகவே நகைச்சுவை செய்து நடித்தார். இதுவரை பல மரங்கள் நட்டிருக்கிறார். அவர்மீது உண்மையான அன்பிருப்பவர்கள் இன்று ஒரு மரக்கன்றாவது நடவேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நகைச்சுவை நடிகர் லொல்லு சபா சாமிநாதன் : “விவேக் சார் ஈகோவே இல்லாதவர். எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் என்றால் விவேக் சார்தான். இதனை நான் எல்லா பேட்டியிலும் சொல்லியிருக்கிறேன். சொக்கத் தங்கம். அவர் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது”.

நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா : “விவேக் மிகப்பெரிய அறிவாளி. புத்தக வாசிப்பாளர். சினிமாவுக்காக அரசு பணியை தியாகம் செய்தவர். 59 வயது என்பது மரணத்திற்கான வயதல்ல. விஸ்வாசம் படத்திலிருந்து அவருடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். 20 நாட்களுக்கு முன்புகூட தமிழ் எதுகை மோனைப் பற்றி நிறைய பேசினோம். தமிழ் மக்களுக்காக நிறைய செய்திருக்கிறார். அப்துல்கலாமின் செல்ல மகன் விவேக் குடும்பத்திற்கு அமைதி கிடைக்கட்டும்”.

நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் : ”எங்கள் நகைச்சுவைக் குடும்பத்தில் இருந்து ஒருவர் இறந்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் : “எங்களைப் போன்ற வளரும் கலைஞருக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடன் மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். சக காமெடி நடிகர்களை ஊக்குவிப்பார். இன்னொரு சின்ன கலைவாணர் இனி உருவாவாரா என்பது தெரியாது” என்றார்.

நகைச்சுவை நடிகை மதுமிதா : “காஷ்மோரா படத்தில் அவரது மகளாக 35 நாட்கள் பயணம் செய்தேன். மிகவும் நல்ல மனிதர். அவ்வளவு விருது வாங்கியிருக்கிறார். ஒரு சின்ன கர்வம் கூட இருக்காது. சக காமெடி நடிகர்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்துவார். என் வீட்டு கிரகபிரவேசத்துக்கு வந்தவர், 3 மணிநேரம் விழா முடியும்வரை இருந்து வாழ்த்தி விட்டுச் சென்றார். அவரை எனது அப்பாவாகவேப் பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபு : ”விவேக் சாருடன் நிறைய படங்கள் நடித்துள்ளேன். நான் பார்த்தவரை ஒரு காமெடி நடிகனை மற்றொரு காமெடி நடிகர் தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தவர் விவேக் சார். அவருடன் நிறைய பழகியதால் அதிகம் தெரியும். நல்ல மனிதர். என்னிடம் அடிக்கடி மரக்கன்றுகளை நடச் சொல்லிக்கொண்டே இருப்பார்” எனத் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் எம்.எஸ் பாஸ்கர்: “மனதில் உறுதி வேண்டும் படத்தில்தான் அவரை முதன் முதலில் பார்த்தேன். தன்னைப் பற்றி பேசவே மாட்டார். எப்போதும், அப்துல்கலாம் குறித்தும் சமூக நலன் குறித்து மட்டுமே பேசுவார். பக்தி உள்ளவர். ஆனால், பகுத்தறிவோடு கூடிய பக்தி உள்ளவர்” என்றார்.

நகைச்சுவை நடிகர் சார்லி: “மனதில் உறுதி வேண்டும் படத்திலிருந்து வெள்ளைப் பூக்கள் வரை அவருடன் நெடிய பயணம். ஏனோ தானோ என்று காமெடியாக பேசமாட்டார். சமூக அக்கறை நிஜத்திலும் கொண்டவர். அற்புதமான நண்பர். யாருக்காவது கஷ்டம் என்றால் தாங்க முடியாது. முதல் குரலாக அவர் குரல்தான் ஒலிக்கும். அடுத்தவரின் குரலாகவே தமிழ் சினிமாவில் இருந்தார். எனது குடும்ப நண்பர் என்பதால் இது எனக்கு தனிப்பட்ட இழப்பு” என்றார்.