நடிகர் ரோபோ சங்கர் காலமானார் web
சினிமா

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.

Rishan Vengai

சின்னத்திரையின் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஸ்டேண்டப் காமெடியனாக மக்கள் அறிமுகம் பெற்ற நடிகர் ரோபோ சங்கர், தனியார் சேனலில் நகைச்சுவை ஷோக்களில் தன்னுடைய மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். அதுமட்டுமில்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் மிமிக்ரி கலைஞராக கவனம்பெற்றார்.

தன்னுடைய விடாமுயற்சியால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர், நடிகர் ரவிமோகனின் தீபாவளி படத்தில் கதாநாயகனின் நண்பராக நடித்தார்.

நடிகர் ரோபோ சங்கர்

தொடர்ந்து யாருடா மகேஷ், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்த அவர், தனுஷின் மாரி, விஜயின் புலி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் அவருடைய காமெடி கதாபாத்திரம் ரசிகர்களின் விருப்ப கதாபாத்திரமாக மாறியது.

உடல்நலக்குறைவால் திடீர் மரணம்..

திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுவந்த நடிகர் ரோபோ சங்கர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடல்மெலிந்து போனார். அதற்கு சில கெட்டபழக்கங்கள் காரணம் என்று அவரே வெளிப்படுத்தினார். தொடர்ந்து மஞ்சள் காமாலை மற்றும் நீர்சத்துகுறைபாடு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்துவந்தார்.

உடல்மெலிந்து போனது குறித்து காவல் துறை சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், “நான் உடல்நலத்தால் பாதிக்கப்பட்டேன். இதனால் 5 மாதம் படுத்தபடுக்கையாக சாவின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதற்குக் காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்கம். அவற்றுக்கு நான் அடிமையாயிட்டேன். இதனால் நான் உங்களுக்கு உதாரணமாக உள்ளேன்” என்று பேசியிருந்தார்.

நடிகர் ரோபோ சங்கர்

பின்னர் தன்னுடைய உடல்நலன்மீது கவனம் செலுத்தி ரோபோ சங்கர், கொஞ்சம் கொஞ்சமா அதிலிருந்து மீண்டுவந்து மீண்டும் திரைப்படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்துவந்தார்.

இந்த நிலையில், தனியார் சேனல் நிகழ்ச்சிக்காக தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்ட ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தததால் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நீரிழவு ஏற்பட்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்த 46 வயதான நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. சிறந்த நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் இறப்பு அவருடைய ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. திரைத்துறையினர் ரோபோ சங்கர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.