ரோபோ சங்கர்  web
சினிமா

”ரோபோ சங்கரின் ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை ..” - சோகத்தைப் பகிர்ந்த மதுரை முத்து!

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோபோ சங்கருக்கு இருந்த ஒரேயொரு ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது.

Vaijayanthi S

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோபோ சங்கருக்கு இருந்த ஒரேயொரு ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது.

நகைச்சுவை நடிகரான சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு நடனமாடுவதில் பிரபலமானார். அதனால், அவர் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார். சின்னத்திரையில் ஸ்டேண்டப் காமெடியானாகவும், மிமிக்ரி கலைஞராகவும் பிரபலமடைந்த நடிகர் ரோபோ சங்கர், பல ரியாலிட்டி ஷோவில் கமல்ஹாசனை போல மிமிக்ரி செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றவர். தனது அபாரமான மிமிக்ரி திறமை மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றிருந்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோபோ சங்கருக்கு இருந்த ஒரே ஒரு ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது. அது என்ன தெரியுமா? பல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் என பெரும்பாலான நடிகர்களின் படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார்.

ரோபோ சங்கர் - கமல்ஹாசன்

ஆனால் அவருக்கு ரொம்பவும் நெருக்கமான கமல்ஹாசனுடன் அவர் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. இதுதான் அவருக்கு கடைசிவரை நிறைவேறவில்லை. ரோபோ சங்கர் சிறுவயது முதலே கமல்ஹாசனின் தீவிர ரசிகராகவே வளர்ந்தார். கமல் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படத்தையும் முதல் நாளே திரையரங்கில் பார்த்துவிடுவார். குறிப்பாக, ’ஆளவந்தான்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்காக அவர் மொட்டை அடித்து திரையரங்கிற்குச் சென்ற சம்பவம் கமல் மீது அவர் கொண்ட அன்பை வெளிப்படுத்தியது என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில், ”என்னைவிட பெரிய கமல் ரசிகன் யாருமே இல்லை, கமலைப் பற்றி எனக்குத் தெரிந்ததைவிட வேறு யாருக்கும் தெரியாது” என்று பெருமிதத்தோடு கூறினார். கமலின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரோபோ சங்கரின் வாழ்த்து சுவரொட்டிகளை சென்னையின் எல்லா பகுதிகளிலும் பார்க்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் தனக்கு பேரன் பிறந்தவுடன் குடும்பத்துடன் சென்று கமல்ஹாசனைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கமல் அந்தக் குழந்தைக்கு ’நட்சத்திரன்’ என்று பெயரிட்டார். இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் இறந்த செய்தியை கேட்டவுடன் முதல் இரங்கல் பதிவை கமல்ஹாசன்தான் தெரிவித்திருந்தார்.

ரோபோ சங்கர்

அதில், “ரோபோ புனைபெயர்தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி, போதலால் மட்டும் எனைவிட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மதுரை முத்துவும் ரோபோ சங்கரின் கடைசி ஆசை நிறைவேறவில்லை என்பதை புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.