அஸ்ரானி என்று அன்பாக அழைக்கப்படும் மூத்த நடிகர் கோவர்தன் அஸ்ரானி, உடல்நலக் குறைவால் இன்று தனது 84வது வயதில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு திரைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1940 ஜனவரி 1ஆம் தேதி, ஜெய்ப்பூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த அஸ்ரானி, ராஜஸ்தான் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள அகில இந்திய வானொலியில் குரல் கலைஞராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, 1960 முதல் 1962 வரை, அஸ்ரானி சாகித்ய கல்பாய் தக்கரிடம் நடிப்பைக் கற்றுக்கொண்டார், பின்னர் 1964இல் புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (FTII)சேர்ந்தார். 1967ஆம் ஆண்டு 'ஹரே காஞ்ச் கி சூடியன்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதில், நடிகர் பிஸ்வஜீத்தின் நண்பராக நடித்தார். இந்த காலகட்டத்தில், அவர் பல குஜராத்தி படங்களில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்தார். ’ஷோலே’ படத்தில் ஜெயிலராக அஸ்ரானி நடித்தது மறக்கமுடியாத வேடங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ரிஷிகேஷ் முகர்ஜி, குல்சார் மற்றும் பி.ஆர். சோப்ரா போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களிலும் அவர் நடித்துள்ளார். அஸ்ரானி, ராஜேஷ் கன்னாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார், மேலும் அவருடன் சுமார் 25 படங்களில் நடித்தார், அவற்றில் 1972இல் வெளிவந்த பவார்ச்சியும் அடங்கும்.
2000ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரியதர்ஷனின் நகைச்சுவைத் திரைப்படங்களில் அஸ்ரானி ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். ’ஹேரா பெரி’, ’ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’, ’பாக்பன், சுப் சுப் கே’, ’கரம் மசாலா’, ’போல் பச்சன்’ மற்றும் பல படங்களில் மறக்கமுடியாத வேடங்களில் அவர் நடித்தார். 2023ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படமான ’ட்ரீம் கேர்ள் 2’இன் ஒரு பகுதியாகவும் அஸ்ரானி இருந்தார். நடிகை மஞ்சு பன்சாலை அஸ்ரானி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நவீன் அஸ்ரானி என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று தனது 84வது வயதில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு திரைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.