தமிழ் சினிமாவில் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக போட்டி போடமாட்டேன் என்று லக்ஷ்மிமேனன் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ராசியான நாயகி என பெயர் எடுத்தவர் லக்ஷ்மிமேனன். பள்ளிப் படிப்பில் இருந்த போதே நடிக்க வந்துவிட்டார். அவர் நடித்தாலே படம் ஹிட் என பலரும் அவரை தங்களின் படங்களில் நடிக்க போட்டி போட்டு புக் செய்தார்கள். ஆனால் அவர் ஒரே மாதிரியாக நடிக்க அலுப்பாக இருக்கிறது என கூறி நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட ஆரம்பித்தார். அந்த நேரத்தில் கல்லூரியில் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இந்நிலையில் அவரிடம் உங்களுக்கு என்று இருந்த இடத்தை தவறவிட்டுவிட்டீர்களே? மீண்டும் அந்த இடத்தை பிடிக்க போட்டி போடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லக்ஷ்மிமேனன், நான் எந்த இடத்தில் இருந்தேன் என்பதே எனக்கு தெரியாது. வாய்ப்பு வந்தது நடித்தேன். அப்போது முதல் இடத்தில் இருந்தேனா இல்லை இரண்டாம் இடத்தில் இருந்தேனா என்பதை எல்லாம் நான் யோசித்து கூட பார்த்ததில்லை. அப்படி எனக்கு யோசிக்கவும் தெரியாது. இப்போது சில நல்ல கதைகள் வந்துள்ளன. அதில் நடித்து கொண்டிருக்கிறேன். விட்ட இடத்தை பிடிக்க போட்டி போட வேண்டும் என்று நினைத்து வேலை செய்தால் அந்த வேலையில் மன அமைதி கிடைக்காது. எனக்கு நிம்மதிதான் முக்கியம். நான் இப்போதும் சந்தோஷமாகதான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.