சினிமா

தாதா சாகேப் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிக்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள்

தாதா சாகேப் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிக்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள்

நிவேதா ஜெகராஜா

67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிக்கு திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினி பேசுகையில், ''தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். விருதுக்கு காரணமான தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் என் நன்றி'' என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் உயரிய விருதை பெற்றதை தொடர்ந்து, அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளம் வழியாக தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நெஞ்சம்நிறைந்த என் வாழ்த்துகள். திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்து அறிக்கையில், “இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதொரு பொன்னாளாகும். இந்தியத் திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல்நலத்தோடு ஆண்டுகள் பல நீடூடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “திரைத்துறையின் உயர்ந்த விருதான #DadasahebPhalke விருது பெறும் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் மட்டுமன்றி இன்னும் பல பிரபலங்களும் ரசிகர்களும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வழியாக பகிர்ந்து வருகின்றனர்.