கொரோனா அச்சத்தால் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதுவரை மூன்று போஸ்டர்களை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி காதலர் தின பரிசாக ‘குட்டிக் கதை’ பாடல் வெளியாகி கோடிக்கணகான ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளதாக படக் குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழா என்றாலே அவரது ரசிகர்கள் உற்சாகமாகிவிடுவார்கள். ‘பிகில்’ படத்தின் இசை வெளியிட்டு விழா, ஒரு தனியார் கல்லூரியில் நடந்த போது பெரிய தள்ளுமுள்ளு நடந்தது. எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களைவிட அதிகமானவர்கள் குவிந்ததால் அங்கே போலீசார் தடியடி கூட நடத்தினர். அதற்குப் பின் குறிப்பிட்ட கல்லூரி எப்படி திரைப்பட விழாவிற்கு அனுமதி வழங்கியது என தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் கூட அனுப்பப்பட்டது. ஆகவே அந்த விழா குறித்து சர்ச்சை தொடங்கியது.
அந்த விழாவில் பங்கேற்ற விஜய், “அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியல் வேண்டாம். சமூக வளைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். சமூக பிரச்னைகளுக்கு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்யுங்கள். என்னுடைய போஸ்டர்களை கிழித்தாலும் பரவாயில்லை. என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம். வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான். நாம் கோல் அடிக்கும்போது அதை தடுக்க சிலர் வருவார்கள். யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும்” எனப் பேசியிருந்தார். ‘பிகில்’ பட விழாவில் கொஞ்சம் வெளிப்படையாக விஜய் பேசியதாக பலரும் கூறியிருந்தனர். அவரது பேச்சுக்கு எதிராகவும் சிலர் கருத்து கூறியிருந்தனர்.
இந்நிலையில்தான், ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவிற்காக அரசிடம் அனுமதி கேட்கப்பட்ட போது கொரோனா அச்சத்தினால் அதிக கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், கடந்த முறை கல்லூரியில் விழா நடத்திய போது விஜய்யின் ரசிகர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. அவர்களை தாக்கியதற்காக விஜய் மேடையில் தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். மீண்டும் கொரோனா அச்சம் நிலவும் இந்தச் சூழலில் பெரிய கூட்டத்தை திரட்டினால் அது தேவையில்லாத பல சங்கடங்களை உருவாக்கும் என்று படக்குழுவினர் அதனை தவிர்க்க முடிவு எடுத்துள்ளனர்.
ஆகவே, சென்னையில் உள்ள ஒரு தனியார் நடசத்திர ஹோட்டலில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் படத்தைச் சார்ந்த படக்குழுவினர் சிலருக்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக ஸ்பான்சர் செய்துள்ள தொழிலதிபர்கள் சிலருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், இது நேரடி ஒளிபரப்பு என்பதால் விஜய் கொஞ்சம் இன்னும் சுதந்திரமாக பேச முடியும் என்றும் கூறப்படுகிறது. சில மாதங்களாகவே விஜயை மையமாக வைத்து நடக்கும் ரெய்டு, இன்றும் தொடர்வதால் அது குறித்து விஜய் கொஞ்சம் காரசாரமாக மேடையில் கதை சொல்லலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே விஜய் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். அந்தப் பயணம் முடிந்த பிறகு அவர் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.