தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டு வந்தது. இதனால், திரைத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என கூறி கடந்த மாதம் தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டது. அதைனை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கான புதிய கேளிக்கை வரி செப்டம்பர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் திரைப்படங்களுக்கான இதுவரை இருந்து வந்த கேளிக்கை வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டு 10 சதவீதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனி புதிய படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற திரைப்படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட படங்களுக்கு 7 சதவீத கேளிக்கை வரியும், மற்ற மொழி திரைப்படங்களுக்கு 14 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்புக்குப் பின் சினிமா கட்டணம் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் புதன்கிழமை முடிவு செய்ய உள்ளது. இந்தத் தகவலை தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி.யுடன், புதிதாக அமலுக்கு வந்துள்ள கேளிக்கை வரியும் சேர்க்கப்பட உள்ளதால் சினிமா டிக்கெட் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிகிறது.
இதனிடையே இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த விஷால், இந்த கேளிக்கை வரிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு வரும் பார்வையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார். அதோடு தமிழக அரசு திருட்டுத்தனமாக வெளியாகும் படங்களை 100 சதவீதம் தடுக்க முடியுமா? தமிழ் சினிமா வியாபாரம் ஒன்றும் கொடிகட்டி பறக்கவில்லை. எல்லா படங்களும் பாகுபலியை போல அதிக வசூலை ஈட்டுவதில்லை. கேளிக்கை வரி வேண்டாம் என்று ஏற்கெனவே அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். இதை பல முறை கேட்டுள்ளோம். அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.