சினிமா

மீண்டும் ஒரு ‘கே.ஜி.எஃப்’ -பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியப் படத்தின் பூஜை

சங்கீதா

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சியான் 61’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படமும், மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படமும் நடித்து முடித்துள்ளார். இதில் ‘கோப்ரா’ படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ படம் செப்டம்பர் 30-ம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் விக்ரம் படம் வெளியாவதாலும், இரண்டு படங்களுமே வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், இன்று அந்தப் படத்திற்கான பூஜை சென்னையில் போடப்பட்டுள்ளது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இதன்மூலம் முதல்முறையாக ஜி.வி. பிரகாஷ், பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார்.

இந்தப் படத்திற்கு மைதானம் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானநிலையில், படத்தின் பூஜையின்போது தலைப்பு குறித்து படக்குழுவினர் எதுவும் அறிவிக்கவில்லை. மேலும் படம் குறித்து பா. ரஞ்சித் கூறுகையில், “விக்ரமுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன். 'சியான் 61' படம் 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் 'கே.ஜி.எஃப்' -ல் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் கே.ஜி.எஃப்.ல் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமான வகையில் படம் எடுக்கப்பட உள்ளது.

இந்த படம் தத்ரூபமானதாக இருக்கும். இந்தப் படத்தில் கதாபாத்திரம் வலுவாக இருக்கும் என்பதால் விக்ரமை தேர்வு செய்துள்ளேன். கண்டிப்பாக அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாக அமையும். மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது” இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள ‘கேப்டன் மில்லர்’ படம் 1930-கள் மற்றும் 40-களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து ‘கே.ஜி.எஃப்.’ போன்று பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கவுள்ள படம் கே.ஜி.எஃப்.ல் நடந்த உண்மைக் கதையே எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.