Chiranjeevi, nivas nivas_nj insta
சினிமா

சிரஞ்சீவியின் சர்ப்ரைஸ்.. நெகிழ்ந்த உதவி ஒளிப்பதிவாளர்! | Chiranjeevi | Mega 158

அவர்கள் அப்படிச் செய்யவேண்டிய அவசியமில்லை, ஆனாலும் செய்தார்கள் - ஒருவேளை இதுதான் அவர்களை 'சூப்பர் ஸ்டார்களாக' மாற்றுகிறது.

Johnson

சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது ரசிகர்களுக்கும் உடன் பணியாற்றும் நபர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுப்பதுண்டு. அப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. இப்போது சிரஞ்சீவி Mega 158 படத்தில் பாபி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றுபவர் நிவாஸ். இவருக்கு சமீபத்தில் மகன் பிறக்க, ஜஸ்வந்த் ராம்சரண் எனப் பெயரிட்டுள்ளார். இதனை கேள்விப்பட்டதும் அவரையும், அவர் குடும்பத்தையும் நேரில் அழைத்து சிரஞ்சீவி வாழ்த்தியது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "கடந்த ஆறு ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறேன். அவ்வப்போது சில அதிக  தருணங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அவற்றுள் இதுவே மிகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும். எங்கள் மகனுக்கு ‘ஜஸ்வந்த் ராம்சரண்’ என்று பெயரிட்டதை அறிந்த உடனேயே, சிரஞ்சீவி கொனிடேலா அவர்கள் எங்கள் குழந்தையையும் எங்களையும் ஆசீர்வதித்தது மட்டுமல்லாமல், எங்கள் குடும்பத்தினரைத் தங்கள் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துவதற்காக, என் குடும்பத்தினர் அனைவரையும் திருச்சியிலிருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் வரவழைத்தார்.

இந்தச் செயல் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்துள்ளது. உங்கள் தாராள மனப்பான்மைக்கு நன்றி. எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. என் மனைவியும், பெற்றோரும் நானும் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். என்னவொரு நாள்! எங்கள் அனைவரையும் உடனடியாகச் சந்திக்க விரும்பியதற்கும், எங்கள் நாளை மகிழ்ச்சியானதாக மாற்றியதற்கும், எங்களுடன் அன்புடன் நேரம் செலவிட்டதற்கும் ராம் சரண் சாருக்கு நன்றி.

அவர்கள் அப்படிச் செய்யவேண்டிய அவசியமில்லை, ஆனாலும் செய்தார்கள். ஒருவேளை, இதுதான் அவர்களை 'சூப்பர் ஸ்டார்களாக' மாற்றுகிறது. நன்றி விஜய் கார்த்திக் கண்ணன் சார். உங்களால்தான் என்னால் இதுபோன்ற நாட்களை அனுபவிக்க முடிகிறது; உங்களை என் மேலதிகாரியாகப் பெற்றது என் அதிர்ஷ்டம்" எனக் குறிப்பிட்டுள்ளார் நிவாஸ்.