சினிமா

அடங்காத 'விக்ரம்' ஃபீவர்.. கமல், லோகேஷுக்கு விருந்து வைத்து பாராட்டி தள்ளிய சிரஞ்சீவி!

JananiGovindhan

கோலிவுட்டின் எந்த பக்கம் திரும்பினாலும் ‘விக்ரம்’ படம் தொடர்பான பேச்சாகவே தொடர்ந்து ஒலித்து வருகிறது. இளம் இயக்குநரும் கமலின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

படம் வெளியாகி ஒரே வாரத்தில் உலகெங்கும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலும் செய்திருக்கிறது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே விக்ரம் படத்துக்கு கிட்டிவருகிறது.

திரைத்துறையில் இருந்து பலரும் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்து மழைகளை பொழிந்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி விக்ரம் பட வெற்றியை கொண்டாடும் வகையில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை தனது இல்லத்து அழைத்து இரவு விருந்து வைத்து சிறப்பித்துள்ளார். இந்த விருந்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானும் பங்கேற்றிருந்தார்.

இதனையடுத்து கமல், சல்மான் மற்றும் லோகேஷ் உடன் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை ட்விட்டரில் பகிர்ந்த சிரஞ்சீவி, “அற்புதமான விக்ரம் படத்தின் வெற்றிக்கு மட்டற்ற மகிழ்ச்சி, இதற்காக என் அன்பான நண்பர் கமல் ஹாசனை பாசத்திற்குரிய சல்மான் கான், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருடன் இணைந்து கொண்டாடி கவுரவித்தேன். தீவிரமான த்ரில்லர் படம் விக்ரம். அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்வீட் பகிரப்பட்டதுமே ஆயிரக்கணக்கானோரால் ரீட்வீட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.