சினிமா

சிரஞ்சீவி நடிப்பில் ‘லூசிபர்’ ரீமேக் படப்பிடிப்பு ஆக.,13-ல் துவக்கம்!

sharpana

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ மலையாள சினிமாவில் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானதோடு, வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. மோகன்லால், விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ் உட்பட பலர் போட்டிப்போட்டு நடித்து பாராட்டுக்களை குவித்தனர். அரசியல்வாதி மறைவுக்குப் பிறகு மருமகனுக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் ஏற்படும் மோதலை சுவாரசியமான திரைக்கதை மூலம் பல ட்விஸ்டுகளால் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்தார் பிரித்விராஜ்.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். தனது 153 வது படமான இப்படத்தில், மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், முதலாவதாக பாடல் பணிகளை துவக்கினார் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன். இரண்டு நாட்களுக்கு முன்புகூட, விரைவில் படப்பிடிப்பு துவக்கம் என்று அறிவித்திருந்தார் இயக்குநர் மோகன் ராஜா. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. நான்கு மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.