பாடலாசிரியர் வைரமுத்து மீது தான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீடூ என்ற ஹேஸ்டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாடகி சின்மயி, அண்மையில் பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயினுடைய குற்றச்சாட்டை அவரது தாயாரும் உறுதி செய்துள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை வைரமுத்து மறுத்துள்ளார். அத்துடன் உண்மையை காலம் சொல்லும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மறுப்பிற்கு, வைரமுத்து ஒரு பொய்யர் எனக்கூறி சின்மயி விளக்கமளித்துள்ளார். இவ்வாறு இந்த விவகாரம் தமிழக திரைத்துறையில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த, பலரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் முகநூல் பக்கத்தில் சின்மயி நேரடி ஒளிபரப்பு ஒன்றை செய்தார். அதில், “எனது திருமணத்தின் போது பலருக்கும் நானே நேரில் சென்று திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன். அப்படி செல்லும் போது, திரைத்துறையினர் பலரும் முதலில் வைரமுத்துவுக்கு கொடுத்தீர்களா என்று கேட்டனர். அதேபோன்று வைரமுத்துவின் குடும்பத்திற்கு அழைப்பிதழ் கொடுத்த போதும், வைரமுத்துவுக்கு கொடுத்தீர்களா ? என அவர்களும் கேட்டனர். அப்படி இருக்கையில் நான் எப்படி அழைப்பிதழ் கொடுக்காமல் இருக்க முடியும். வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது. #METOO மூலம் தற்போது ஆண்களும் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை கூற தொடங்கியுள்ளனர். சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது. வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்; நான் வெட்கப்பட மாட்டேன்.
தற்போது உள்ள காலக் கட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டுள்ளன. அது என் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. அந்த சட்டத்தின் மூலம் எத்தனை வருடத்திற்கு பிறகு வேண்டுமானாலும் பாலியல் புகார்களை தெரிவிக்க முடியும். நான் ஒழுங்கான பெண்ணா? என்று கேட்பவர்கள், முதலில் அவர்கள் ஒழுங்கானவர்களா? எனப் பார்க்க வேண்டும். என்னைப் பற்றி என் குடும்பத்தினர் பார்த்துக்கொள்வார்கள். நான் என் துறையின் மீதான ஒரு பாலியல் குற்றச்சாட்டை வெளியில் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.