சினிமா

“சின்மயி முருகா என்றாலும் மீடூ என கேட்கிறது” - ராதாரவி கடும் தாக்கு

“சின்மயி முருகா என்றாலும் மீடூ என கேட்கிறது” - ராதாரவி கடும் தாக்கு

webteam

டப்பிங் சங்கம் குறித்து சின்மயி கூறிய அனைத்து புகார்களும் பொய் என நடிகரும், டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி தெரிவித்துள்ளார்.

கேள்வி : டப்பிங் சங்கத்தில் சந்தா செலுத்தியுள்ளேன் என சின்மயி ஆதாரத்துடன் கூறியுள்ளாரே.! அவர் நீக்கப்பட்டதன் முழுப்பின்னணி என்ன?

பதில் : அவங்க தான் கோர்ட்டுக்கு போறேன் என்று சொல்லுயிருக்கிறார்களே.. கோர்ட்டில் பார்ப்போம் என்று சுருக்கமாக கூறி அந்த விஷயத்தை முடிக்க இயலும். சின்மயி வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் மீது குற்றச்சாட்டை வைத்து, பிளாக் மெயில் செய்து பார்த்தார். அங்கு ஒன்னும் முடியல. உடனே அவர் டப்பிங் சங்கம் பக்கம் திரும்பியுள்ளார். சின்மயி முருகா என்று கூறினால் கூட, மீ டூ தான் நினைவிற்கு வருகிறது. சின்மயியை நாங்கள் நீக்கவில்லை. அவரை நீக்கியது நீதிபதி வாசுகியம்மாள். அவர்தான் தேர்தல் ஆணையர். 2 வருட சந்தா     கட்டவில்லை என நீக்கினார். அதேபோல் நீக்கிய பிறகு சின்மயி டப்பிங் சங்கம் குறித்து பேசக்கூடாது.

கேள்வி : ஆனால் சின்மயி தான் வாழ்நாள் உறுப்பினர் எனக் கூறுகிறாரே?

பதில் : வாழ்நாள் உறுப்பினர் என்றெல்லாம் இல்லை. சின்மயி ரூ.15 ஆயிரம் கட்டியுள்ளார். அதை வங்கி மூலம் கட்டியதாக கூறுகிறார். இது பொய். வைரமுத்து விவகாரத்தில் அவர் கூறிய பாஸ்போர்ட் கதை போன்று இதுவும் பொய்க்கதை.

கேள்வி : ஆனால் சின்மயி வங்கி ஆதாரத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளாரே?

பதில் : அவர் அதை கோர்ட்டில் காண்பித்தால், அவர் அளித்த ஆதாரம் பொய் என்பதை நிரூபிக்கும் எங்கள் தரப்பு ஆதாரத்தை நாங்களும் கோர்ட்டில் காண்பிப்போம். வாழ்நாள் உறுப்பினர் என்றால் அதற்கான அடையாள அட்டையை அவர் கோர்ட்டில் காண்பிக்கட்டும்.

கேள்வி : சின்மயி மீ டூ புகார் தெரிவித்தாரே... அதன் தொடர்ச்சி தானா இந்த டப்பிங் சங்க புகாரும்?

பதில் : அவர் எத்தனை பேர் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் கொடுக்கட்டும். 20 வருடங்களுக்கு முன் கூட மீ டூ நடந்ததாக கொடுக்கட்டும், ஏன் பிறந்த குழந்தையாக இருந்தபோதே மீ டூ நடந்ததாக புகார் கொடுக்கட்டும். அதில் என்ன இருக்கு. சின்மயி யார் யாரைக்கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை எல்லாம் கொடுக்கட்டும்.

கேள்வி : டப்பிங் சங்கத்தில் கலைஞர்களின் வருமானத்தில் இருந்து 10% வசூலிக்கப்படுகிறதா?

பதில் : ஆமாம். இதிலென்ன இருக்கு. 10% வசூலிக்கிறோம். சந்தா வசூலிக்காமல் யூனியன் எப்படி நடத்த முடியும். இறந்துவிட்டால் ரூ.1 லட்சம் கேட்கிறார்கள். குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பணம் கேட்கிறார்கள். இதையெல்லாம் யூனியன் மூலம் செய்ய வேண்டுமென்றால் பணம் வேண்டாமா?

கேள்வி : மீ டூ தொடர்பாக சின்மயி கூறிய புகாரில் உள்நோக்கம் இருக்கிறதா?

பதில் : உள்நோக்கம் இருக்கிறது. சின்மயி அந்த விவகாரத்தை தற்போது ஆறப்போட்டுவிட்டார். தற்போது டப்பிங் சங்கத்திற்கு வந்துவிட்டார். 

கேள்வி : இரண்டு பிரபலங்கள் மீது ஒருவர் மீ டூ புகார் கொடுக்கிறார் என்றால், புகார் கொடுப்பவரும் பிரபலமாக இருக்கிறாரே. இது அவர்கள் மதிப்பை குறைக்காதா? 

பதில் : கண்டிப்பாக குறையும். நான் விஷாலுக்கு ஆதரவாக பேசுகிறேன் என இல்லை. விஷாலை ஒரு மனிதனாக வைத்துக்கொள்வோம். அவர் சுவர் எகிறி குதித்ததாக சொல்கிறார்கள். ஒரு வீட்டிற்கு 3 மணிக்கு வந்ததாகவும் 5 மணிக்கு சுவர் எகிறி குதித்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அப்படியென்றால் அந்த 2 மணி நேரம் அவர் என்ன செய்தார். அதுவரை அவர் பாலியல் குற்றம் செய்ய முயற்சி செய்தாரா.. அப்படி இல்லை.. அதனால் தான் கூறுகிறேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றம்.