சினிமா

’எனக்குத் தடை விதித்து விட்டார்கள்’: மத்திய அமைச்சரிடம் சின்மயி பரபரப்பு புகார்

webteam

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதற்காக, தமிழ் சினிமாவில் தனக்கு தடை விதித்துவிட்டார்கள் என்றும் அதற்கு தீர்வு காணுமாறும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் பாடகி சின்மயி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, சில மாதங்களுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியி ருந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துத் தெரிவித்தனர். இதை மறுத்திருந் தார் வைரமுத்து.

இந்நிலையில் நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் கலைஞர் சங்கம் சின்மயியை திடீரென சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. இதனால் பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங்  பேசி வந்த அவரை யாரும் பயன்படுத்தாமல் உள்ளனர். இதுபற்றி, மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார், சின்மயி. 

அதில், ‘வைரமுத்து மீது நான் புகார் கூறி நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் நான் தடை செய்யப்பட்டுள்ளேன். டப்பிங் யூனியன் எனக்கு தடை விதித்துள்ளது. இன்றைய சட்டம் நான் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை.

எனக்கு ஒரு தீர்வை சொல்லுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டரை பிரதமர் அலுவலகத்துக்கும் டேக் செய்துள்ளார்.

சின்மயி-யின் இந்த புகாருக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி, உங்கள் புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.