இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளிவந்தது மகாராஜா திரைப்படம். திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்த மகாராஜா திரைப்படம், ஓடிடி-ல் வெளியான பிறகு அதிகப்படியானவர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்து பான் இந்தியா திரைப்படமாக உருமாறியது.
ஒரு குப்பைத்தொட்டி காணவில்லை என்ற சாதாரண திரைநகர்வுடன் படம் எதனை நோக்கி செல்கிறது என்ற மனநிலையுடன் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ரசிகரையும், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து இறுதிவரை அழைத்துச்செல்லும் இயக்குநர் நித்திலன், ஒரு அழுத்தமான கிளைமாக்ஸில் யாரும் எதிர்பார்க்காத காட்சியமைப்பை கையாண்டு எல்லோருடைய மனதிலும் பெரிய பாரத்தை ஏற்றிவிடுகிறார்.
கதை சொல்லல், அற்புதமான நடிப்பு, நேர்த்தியான இசை என அனைத்து பிரிவிலும் ஒரு திரைப்படமாக வெற்றிக்கண்ட மகாராஜா திரைப்படம், ஒடிடியில் வெளியான பிறகு பெரும்பாலோனோரின் விருப்பத் திரைப்படமாக மாறியது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 29, 2024 அன்று சீனாவில் வெளியான மகாராஜா திரைப்படம் அங்கிருக்கும் சினிமா ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் 40,000 திரைகளில் வெளியான மகராஜா திரைப்படம் இதுவரை 91.65 கோடியை அங்கு வசூலித்துள்ளது, இதன்மூலம் உலகளாவிய வசூலானது 199.20 கோடியாக நீடிக்கிறது.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று மகாராஜா திரைப்படத்தை பார்க்கும் சீனா ரசிகர்கள், உணர்ச்சிபூர்வமான காட்சிகளுக்கு எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்துகிறது. அதில் கண்ணீருடன் ரசிகர்கள் படத்தை பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவை வெளியிட்டிருக்கும் பயனர், ”சீனாவில் அப்பா-மகள் கதைக்களம் கொண்ட இந்தியத் திரைப்படங்கள் நன்றாகவே ஓடுகின்றன. தங்கல், சிங்கிங் சூப்பர் ஸ்டார் படங்களை தொடர்ந்து தற்போது மகாராஜா திரைப்படமும் இணைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.