“எங்க பேர எங்க விருப்பப்படி எழுத விடமாட்டீங்களா?”, “சாதி, மதம், நிறம், வர்க்கம் உருவாக்கியிருப்பதை அறிவியல் மூலமா மாத்த விரும்புறேன்” என்ற வசனங்களோடு ட்ரெய்லர் வெளியான நாளே நல்ல வரவேற்பை பெற்றது இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மனுஷி’ திரைப்படம். இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஆனால், மனுஷி திரைப்படத்தில் மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்சார் சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த சூழலில் தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்தநிலையில், வெற்றிமாறன் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (4.6.2025) நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்று சென்சார் போர்டு குறிப்பிடவில்லை என்று வெற்றிமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, விளக்கமளித்த சென்சார் போர்டு, நாட்டின் ஒருமைப்பாடுக்கு எதிராகவும், அரசியல் கொள்கைக்கு அவதூறு விளைவிக்கும் காட்சிகளையும் நீக்கினால் சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்தவெங்கடேஷ், “வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எவை? . ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்களை தெரிவிக்காவிட்டால் எப்படி எடிட் செய்ய முடியும். ” என்று கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து சென்சார் போர்டு விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஜுன் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.