சினிமா

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

webteam

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீ‌பாவளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அதிமுக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாகவும் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதனை விமர்சிப்பது போல் உள்ளதாகவும்  புகார் எழுந்தது. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டு, விஜய்யின் பேனர்களை கிழித்தனர். 

இந்தச் சூழலில் ‘சர்கார்’ திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் படம் மறு தணிக்கைக்கு சென்று சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் முன் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் நள்ளிரவில் தனது வீட்டின் கதவை காவல்துறையினர் சூழ்ந்ததாலும், தான் கைது செய்யப்படலாம் என்பதாலும் ஜாமீன் கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். படத்தில் டிவியை எரித்தால் சம்மதமா? எனக் கேள்வி எழுப்பினார். ‘சர்கார்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் அரசு திட்டங்களை தீயில் எரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து முருகதாஸின் முன்ஜாமீன் மனுவை நவம்பர் 27ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் முருகதாஸை 27ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.