புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து இரு தினங்களுக்குள்ளாக அப்படம் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், நேற்று மும்பை பாந்த்ராவில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பையை அடுத்த பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி திரையரங்கத்தில் நேற்று புஷ்பா 2 திரைப்படம் பார்க்க ரசிகர்கள் பலர் வந்துள்ளனர். அப்போது இடைவேளைக்குப்பிறகு அடையாளம் தெரியாத ஒருவர் திரையரங்கத்துக்குள் ஸ்ப்ரே அடித்துள்ளார்.
இதனால் படம் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு உடனடியாக இருமல் மற்றும் தொண்டை உபாதை ஏற்பட்டுள்ளது. சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சிலர் முகத்தை மூடிக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர். இதனால் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. போலீசாரின் தீவிர சோதனைக்குப் பின்னும் யார் அந்த நபரென்பது தெரிய வரவில்லை என சொல்லப்படுகிறது. இருப்பினும் தீவிர தேடுதலுக்குப் பிறகு தொடர்ந்து படமானது திரையிடப்பட்டது.
யார் அந்த நபர், எதற்காக அவர் அப்படி செய்தார், எந்த பொருளைக்கொண்டு ஸ்ப்ரே செய்தார் என்று தற்போது தெரியவில்லை என்பதால், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களில் ஒருவர் தனது மொபைலில் படம்பிடித்து எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.