jana nayagan web
சினிமா

விஜய் கரியரில் இதுதான் 2வது படம்.. A சான்றிதழுடன் ரிலீஸாகும் ‘ஜனநாயகன்’.!

முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு, ஏழு மாதங்களாக நீடித்துவந்த தணிக்கைச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இறுதியாக A சான்றிதழ் வழங்கியுள்ளது.

Rishan Vengai

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ஜனநாயகன், நடிகர் விஜய்யின் திரைப்பட வாழ்க்கையின் கடைசி படமாகவும், அவர் முழுநேர அரசியலுக்கு சென்ற பிறகு வெளியாகும் முதல் திரைப்படமாகவும் கருதப்படுவதால், தொடக்கத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதலில், படம் 2026 ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டது. தயாரிப்பாளர்கள் அனைத்து நடைமுறைகளையும் முடித்து தணிக்கைக்காக விண்ணப்பித்திருந்த போதிலும், சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆரம்ப ஆய்வுக் குழு U/A பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் சில புகார்களின் அடிப்படையில் படம் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டதால் சர்ச்சை உருவானது.

ஜனநாயகன் பட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இதனால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி, படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சான்றிதழ் வழங்கும் நடைமுறை மீண்டும் தாமதமானது. பின்னர் உச்சநீதிமன்றம், உரிய சட்ட நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை மறுஆய்வுக்காக சமர்ப்பித்தனர்.

அதன்பிறகு, மறுதணிக்கை குழுவின் திரையிடல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. ஒருகட்டத்தில் குழு உறுப்பினர் ஒருவர் உடல்நலக்குறைவால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், ஜனவரி வெளியீடு தவறிய படம், பல மாதங்களாக வெளியாகாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஏழு மாதக் காத்திருப்புக்குப் பிறகு, ஜனநாயகன் திரைப்படத்திற்கு தற்போது A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமடைந்துள்ளன. படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்களாக இறுதி செய்யப்பட்டுள்ளது.ஏ சான்று காரணமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் படம் பார்க்க அனுமதியில்லை. இதனால், விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகமும் இந்த அறிவிப்பை முக்கிய திருப்புமுனையாகக் கருதுகிறது.

திரைப்படம் வெளியான பிறகு, அது வசூல் சாதனைகளை மட்டுமல்லாமல், நடிகராக விஜய்யின் திரைப்பயணத்திற்கான நிறைவு அத்தியாயமாகவும், அரசியல் பயணத்துக்குப் பிறகு வெளியாகும் முக்கிய படைப்பாகவும் தமிழ் சினிமா வரலாற்றில் தனித்த இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுதான் முதல்முறை..

ஜனநாயகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய், அவருடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை 68 படங்கள் நடித்துள்ளார். இந்த 68 படங்களில் இதுவரை ஏ சென்சார் சான்றிதழுடன் வெளியான திரைப்படம் பகவதி மட்டும். இந்தசூழலில் விஜயின் கடைசி மற்றும் 69வது திரைப்படமாக வெளியாகவிருக்கும் ஜனநாயகன் திரைப்படமும் ஏ சான்றிதழுடன் வெளியாகவிருக்கிறது.