விஜய் எடுத்து கொண்ட ‘மாஸ் செல்ஃபி’ இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்றுள்ளது.
‘பிகில்’ பட வியாபாரம் தொடர்பாக கடந்தவாரம் வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் வீட்டை சோதனை செய்தனர். நெய்வேலியில் படப்பிடிப்பிலிருந்த விஜயை சென்னை அழைத்தனர். மேலும் விஜயை அவரது பனையூர் வீட்டிற்கு அழைத்துச்சென்று அங்கே வைத்து விசாரித்தனர். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வருமானவரி சோதனை மூலம் யாருக்கும் தெரியாமல் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடந்து வந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு உலகத்திற்கே தெரியும் அளவு தலைப்புச் செய்தியானது.
இதைத்தொடர்ந்து நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விஜய் படத்திற்காக ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியதை கண்டித்து பாஜகவினர் திடீர் போராட்டம் நடத்தினர். அந்தச் செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக நெய்வேலியில் திரண்டனர். மேலும் விஜய்க்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். தனது ரசிகர்கள் குவிந்த செய்தியை அறிந்த விஜய், படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியே வந்தார். தனது ரசிகர்களைப் பார்த்து கை அசைத்துச் சென்றார். இந்தக் காட்சியை அவரது ரசிகர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அது வைரலாக பரவியது.
இதைத்தொடர்ந்து ஷூட்டிங் வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அங்கு நின்றவாரே தனது போனில் ஒரு ‘மாஸ் செல்ஃபி’ எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த விஜய், ‘நன்றி நெய்வேலி’ என அதில் கூறியிருந்தார். அந்தப் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக பரப்பினர். மேலும் பல திரைப் பிரபலங்கள் அந்தப் படத்தை எடுத்துபோட்டு கருத்திட்டு வந்தனர்.
விஜயின் தீவிர ரசிகரான நடிகர் சிபி, விஜயின் ‘தலைவா’ படத்தின் பாடல் வரிகளான “அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட உச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ பத்தோடு பதின்னொன்று நீ இல்லையே பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி” என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்த செல்ஃபி புகைப்படம் சம்பந்தமாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. விஜயின் இந்தப் படம் ட்விட்டரில் 2,18,000 வரை லைக்ஸுகளை பெற்றுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக விருப்பங்களைப் பெற்றுள்ளதை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளனர்.