சினிமா

காயத்ரி ரகுராம் மீது காவல் ஆணையரகத்தில் புகார்

காயத்ரி ரகுராம் மீது காவல் ஆணையரகத்தில் புகார்

Rasus

மீனவர் மற்றும் சேரி மக்களை இழிவுப்படுத்தும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகை காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளனர். இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளதாகவும், அதனை‌த் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்யவேண்டும் என்றும் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையரிடத்தில் மனு அளிக்கப்‌பட்டது. 
இந்த‌ நிலையில் இன்று மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், இது போன்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் தெரிவித்த சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு, தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவரது தாயார் கிரிஜா தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணை இந்த அளவு இழிவுப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ள அவர் தாயின் மனவருத்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.