சினிமா

'சர்கார்' படத்தில் இலவச திட்டங்களை விமர்சித்த விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு ரத்து

webteam

சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைக்கபட்டது. இதனால் அரசின் திட்டங்களை தவறாக குறிப்பிடுவதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு ஏற்கனவே முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் எனக்கு எதிரான புகார் அரசியல் கால்புணர்ச்சி காரணமாக அளிக்கபட்டதாகவும் அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், திரைப்படம் தணிக்கை முடிந்த பிறகு தான் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சூட்டிகாட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.