சினிமா

‘ஆர்ஆர்ஆர்’ நாயகனுடன் கைக்கோர்க்கும் இயக்குநர் வெற்றிமாறன்? - தனுஷும் இருக்கிறாரா?

சங்கீதா

இயக்குநர் வெற்றிமாறன், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் கைக்கோர்க்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வெற்றிமாறன். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு, தற்போது ‘விடுதலை’ என்றப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டுப் பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவி வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகும் ஒரு இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன், ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து மூன்று கதைகள் சொல்லி இருப்பதாகவும், அதில், ஒரு கதையை ஜூனியர் என்.டி.ஆர். ஓ.கே. செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் கதை இரண்டு பாகங்களாக எடுக்கப்பட உள்ளதாகவும், அதில் முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர். லீட் ரோலில் நடிக்க உள்ளதாகவும், இரண்டாவது பாகத்தில் நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ட்விட்டரில் #Vetrimaaran என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் இந்தப் படத்தை தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாகவே ஜூனியர் என்.டி.ஆர். - வெற்றிமாறன் கூட்டணிக் குறித்து தகவல் பரவி வந்தாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, லிங்குசாமி, அவரது சிஷ்யர் வெங்கட் பிரபு ஆகியோர் தெலுங்கு திரையுலக தேசத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அவர்களின் வரிசையில் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒருபுறம் தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தமிழ் சினிமா ஹீரோக்களை நோக்கி படையெடுக்க, மறுபுறம் தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு சினிமா ஹீரோக்களை நோக்கி செல்கிறார்கள்.