Boyapati Srinu Jaya Janaki Nayaka
சினிமா

உலகிலேயே அதிக பார்வையாளர்கள்.. வியூவ்ஸ் அள்ளிய தெலுங்குப் படம்! | Boyapati Srinu

தியேட்டர் ஆடியன்ஸ் கைவிட்டாலும், இப்படத்தை யூட்யூப் ஆடியன்ஸ் உயர்த்திப் பிடித்ததோடு, பெரிய அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளனர்.

Johnson

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் போயபட்டி சீனு. ஆக்‌ஷன் + ஃபேமிலி படங்கள்தான் இவரது ஸ்பெஷல். தமிழ் ரசிகர்களுக்கு தெரிவதுபோல சொல்வதென்றால், சிம்பு நடித்த `சரவணா' படத்தின் ஒரிஜினல் `பத்ரா' படம் இயக்கியவர் இவர்தான். இன்னும் பளீச் எனச் சொல்வதென்றால், பாலகிருஷ்ணாவின்  `அகண்டா' படம் இயக்கியவர். இவர் இயக்கிய `Tulasi', `Simha', `Legend', `Sarrainodu' என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார்.

இவர் இயக்கிய படங்களில் ஒன்றுதான் 'ஜெய ஜானகி நாயகா' (Jaya Janaki Nayaka). பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ், ரகுல் ப்ரீத் சிங், சரத்குமார், ஜெகபதி பாபு, சித்தாரா எனப் பலரும் நடித்திருந்த இப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. வரிசையாக ஹிட் கொடுத்த போயபட்டி சீனுவுக்கு முதல் சறுக்கலாக அமைந்தது இப்படம். சுமார் ரூ. 40 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் ரூ. 20 கோடியை மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்ததோடு அல்லாமல், ட்ரோல் மெட்டீரியலும் ஆனது இந்த 'ஜெய ஜானகி நாயகா'.

தியேட்டர் ஆடியன்ஸ் கைவிட்டாலும், இப்படத்தை யூட்யூப் ஆடியன்ஸ் உயர்த்திப் பிடித்ததோடு, பெரிய அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளனர். ஆக்‌ஷன் படங்கள் எந்த மொழியில் வந்தாலும் அதன் இந்தி டப்பிங் உரிமைக்கு பெரிய கிராக்கி உண்டு. வட மாநில மக்களுக்கு ஆக்‌ஷன் படங்கள் மேல் இருக்கும் மோகமே இதற்கான காரணம். அதிலும் போயபட்டி ஸ்டைல் மசாலா ஆக்‌ஷன் பிடிக்காமல் போகுமா என்ன? அப்படி 'ஜெய ஜானகி நாயகா' படத்தை ஹிந்தியில் 'கூன்ஹார்' (Khoonkhar) என்ற பெயரில் டப் செய்து, 2019-ஆம் ஆண்டு 'பென் மூவிஸ்' என்கிற நிறுவனத்தால் யூட்யூபில் பதிவேற்றப்பட்டது. அங்கிருந்துதான் இந்தத் திரைப்படத்தின் செகண்ட் இன்னிங்க்ஸ் தொடங்கியது.

யூட்யூபில் பதிவேற்றப்பட்ட உடனே பெரிய அலை இல்லை என்றாலும், மெல்லமெல்ல இப்படத்துக்கு என ஒரு கவனம் கிடைக்க ஆரம்பித்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக சிறுகச்சிறுக மக்களைச் சென்றடைந்து இப்போது 1 பில்லியன் அதாவது, 100 கோடி பார்வைகள் என்ற சாதனையை எட்டியுள்ளது. உலக அளவில் 1 பில்லியன் வியூஸ் பெற்ற முதல் படம் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது 'ஜெய ஜானகி நாயகா'.

இந்த அளவிலான கவனத்தை இப்படம் பெற முக்கியமான இரு காரணிகள் சொல்லப்படுகிறது. வட இந்திய ரசிகர்களைப் பெரிதும் ஈர்க்கும் பிரமாண்டமான சண்டைக் காட்சிகளும், அழுத்தமான குடும்ப உணர்வுகளும் இருந்தால் பெரிய அளவில் பிடிக்கும், அதைப் பார்ப்பவர்களில் பெரும்பாலோனோர் சாமானிய மக்கள். Word of mouth போல மெல்லமெல்ல அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இப்படங்களைப் பரிந்துரைக்கின்றனர். இன்னொன்று, பார்வையாளர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் புரிந்துகொண்டு, யூட்யூப் தளம் தொடர்ந்து இந்தப் படத்தைப் புதிய பார்வையாளர்களுக்குப் பரிந்துரை செய்ததும் இதன் தொடர் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாம்.

தென்னிந்தியப் படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து தொலைக்காட்சிகளிலும் யூட்யூபிலும் வெளியிடும் வழக்கம் பல ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. அல்லு அர்ஜுனின் 'புஷ்பா', யாஷின் 'கே.ஜி.எஃப்' போன்ற பான்-இந்தியப் படங்களுக்கு வட இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உருவாகியிருப்பதற்கு இந்த டப்பிங் கலாசாரமே அடிப்படைக் காரணம். இதன் உச்சபட்சமாக சொல்வது என்றால், தென்னிந்திய மொழியில் ஒரு படம் உருவாகிறது என்றால், துவக்கத்திலேயே அந்தப் படத்தில் அதிக சண்டைக்காட்சிகள் இருந்தால் இந்தி டப்பிங் ரைட்ஸுக்கு பெரிய விலை கிடைக்கும். படத்தில் விலங்குகள் ஏதாவது இருந்தால், இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனையாகும். இப்படி இந்தி டப்பிங் உரிமையை மையமாகக் கொண்டும் தென்னிந்திய சினிமாக்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது 'ஜெய ஜானகி நாயகா' கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் போயபாடி சீனு, "1 பில்லியன் பார்வைகள், 1000 மில்லியன் இதயங்கள், 100 கோடி உணர்வுகள், 1 திரைப்படம். உலகிலேயே இந்தச் சாதனையை எட்டிய முதல் படம் இதுதான்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத் சிங், "ஜானகி கதாபாத்திரம் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது" என்று கூறி, ரசிகர்களுக்கும் இயக்குநருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.