சினிமா

அஜித்தா? ரஜினியா? வசூல் மன்னன் யார் ? - வரிந்துகட்டும் ரசிகர்கள்..!

அஜித்தா? ரஜினியா? வசூல் மன்னன் யார் ? - வரிந்துகட்டும் ரசிகர்கள்..!

webteam

‘பேட்ட’ படத்தின் வசூலை தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ முறியடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் உச்சபட்ச வசூல் நாயகர்களாக திகழ்வது ரஜினி, விஜய் மற்றும் அஜித். இவர்களில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடித்த ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி ஒன்றாக வெளியானது. தமிழகம் உட்பட உலகம் முழுவதும் ‘பேட்ட’ அதிக திரைகளில் வெளியானது. அதேசமயம் இந்திய அளவில் அதிக திரைகளில் வெளியாகவிட்டாலும், தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தது. இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டக்குரிய விமர்சனங்களைப் பெற்றன. 

‘பேட்ட’ படம் பார்த்தவர்கள் பெரும்பாலும், “ரஜினியை பழைய ரஜினியாக பார்க்க முடிகிறது. பாடல்கள் நன்றாக இருக்கிறது. அனைத்துமே நன்றாக இருக்கிறது” என்றனர். ஆனால் ‘விஸ்வாசம்’ படத்திற்கு வந்த ஒருமித்த விமர்சனமாக, “குடும்பத் திரைப்படம். ரொம்ப செண்டிமெண்டா இருக்கு” என்பதுதான். இதனால் பொங்கல் நேரத்தின் போது, குடும்பங்களின் படையெடுப்பு விஸ்வாசத்திற்கு அதிகரித்தது. இதனால் அதன் வசூல் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. 

குடும்பங்களின் வருகை அதிகரிப்பால், தமிழகத்தில் விஸ்வாசத்தின் திரைகளும் அதிகரித்தன. இதனால் ஒரு வாரத்தில் அந்தப் படம் ரூ.125 கோடியை தமிழகத்தில் வசூல் செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ‘பேட்ட’ ரூ.100 கோடியை தாண்டிவிட்டது. இதன்மூலம் தமிழகத்தில் விஸ்வாசமே அதிக வசூலை பெற்றுவிட்டது எனக் கூறப்படுகிறது. 

அதேசமயம் உலக அளவில் கணக்கிடும் போது, ‘பேட்ட’ விஸ்வாசத்தை முந்திவிட்டது. இந்த இரண்டு கருத்துக்களை கையில் எடுத்துக்கொண்டு ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வரிந்துகட்டி வருகின்றனர். அதேசமயம் ரஜினியும் சரி, அஜித்தும் சரி தங்களது ரசிகர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையான, “உங்கள் குடும்பத்தை முதலில் கவனியுங்கள். பின்னர் படத்தை பாருங்கள்” என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த ஒன்றாக உள்ளது.