பல த்ரில்லர் வகைப் படங்களைப் பார்த்திருப்போம். அண்மைக்காலமாக சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த குறும்படங்கள் - ஆவணப் படங்களையும் கடந்து வந்திருப்போம். ஆனால், தமிழில் த்ரில்லரையும் சூழலியலையும் கலந்து புது அனுபவம் பாய்ச்ச முயற்சித்திருக்கிறது 'பூமிகா'. எனவே, இப்படத்தை 'ஈக்கோ-த்ரில்லர்' என்றும் அழைக்கலாம்.
எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் விதுவுக்கு ப்ராஜெக்ட் ஒன்று கிடைக்கிறது. அந்த ப்ராஜெக்ட்டுக்காக வனத்திற்குள் செல்லும் அவருடன் மனைவி, மகன், தங்கை, தோழி என 4 பேரும் சேர்ந்து பயணிக்கின்றனர். ஆள் அரவமற்ற அந்த வனத்தில், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் 'தீடீர் திடீர்னு உடையுதாம் சாயுதாம்' என்ற ரீதியில் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ, அதற்கு என்ன காரணம்? இதெல்லாம் யார் செய்கிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடைதேடும் பயணமாக விரிகிறது 'பூமிகா'.
நேரடியாக விஜய் டிவி சேனலில் வெளியான இந்தப் படம், அடுத்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜி தொடரில் 'இன்மை' என்ற பகுதியை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத்தின் அடுத்த படைப்பாக வெளிவந்திருக்கிறது 'பூமிகா'.
படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை தவிர்த்துவிட்டு பார்த்தால் அனைவரும் புது முகம்தான். நடிகர்கள் மட்டுமல்லாமல் டெக்னிஷியன்கள் என புதிய குழுவே இறங்கியிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷை பொறுத்தவரை அவர் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் தேவைக்கு அதிகமான நடிப்பு துருத்திக்கொண்டிப்பதை உணர முடிகிறது.
கௌதமாக, 'விது' நடித்துள்ளார். 'பேட்ட' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியவருக்கு முதல் படம். ஆனால், நடிகராக அவர் தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது தோழியாக நடித்துள்ள சூர்யா கணபதி, ஆல்பம் பாடல்கள் மூலமாக கவனம் ஈர்த்தவர். ஆனால், நடிப்பில் அவருக்கு இன்னும் பயிற்சி தேவை.
அதேபோல அதீதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாதுரி நம் பொறுமையை பெரிதும் சோதிக்கிறார். 'இங்கிருந்து போயிடலாம்.. போயிடலாம்' என படத்தில் 100 தடவையாவது சொல்லியிருப்பார். 'தயவு செஞ்சு அவங்கள அனுப்பிவிடுங்க' என பார்வையாளர்களை கொந்தளிக்க வைக்கிறார். தவிர, பூமிகா கதாபாத்திரத்தில் நடித்த அவந்திகா சிறப்பான நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் உடல்மொழியை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார். அதேபோல பாவல் நவகீதன், நக்கலைட்ஸ் பிரசன்னா பாலசந்திரன் ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.
சோஷியல் மெசேஜ் ஒன்றை த்ரில்லர் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். படத்தின் முதல் ஒரு மணி நேரம் அப்படி ஒரு சுவாரஸ்யத்துடன் செல்கிறது. அடுத்து என்ன என்ற ஆவல் தொற்றிக்கொண்டு அகல மறுக்கிறது. நல்ல ஃப்ளோவாக செல்லும் படத்தில் தொடக்கத்தில் அமானுஷ்யங்களை கண்டு பயந்தவர்கள், ஒருகட்டத்தில், பேய்தானே என அசால்ட்டாக நடந்துகொள்வது, படத்திலிருந்து நம்மை அந்நியப்படுத்தி விடுகிறது. இதனால் ஆரம்பத்திலிருந்த விறுவிறுப்பு தேய்ந்து, இடையில் பிளாஷ்பேக் காட்சியில் மீண்டும் அது உயிர் பெறுகிறது. பின்னணி இசை, எடிட்டிங், கேமரா என தொழில்நுட்ப ரீதியில் படம் ஸ்கோர் செய்தாலும், திரைமொழியிலும், நடிப்பிலும் படம் தடுமாறியிருக்கிறது.
மனித உடலுடன் இயற்கையை இணைத்து பேசும் காட்சிகள் சிறப்பு. 'என்னைய காப்பாத்திக்க தெரியும்; முடிஞ்சா என்கிட்ட இருந்து உன்னய காப்பாத்திக்கன்னு பூமி தெளிவா சொல்லுது' என பாவல் நகீதன் பேசும் வசனம் சூழலியல் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கலாம். சில லாஜிக் பிரச்னையை தவிர்த்து, நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் 'பூமிகா' இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
-கலீலுல்லா