`ஜவான்' என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்துவிட்டு, அடுத்த படம் பற்றிய எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தார் ஷாரூக்கான். நேற்று அவரது 60வது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த படத்தின் தலைப்பை, ஒரு டீசருடன் சேர்த்து அறிவித்தார். கலர் செய்யப்பட முடி, காதில் சிவப்பு வளையம் என வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார் ஷாரூக்.
ஷாரூக்கின் இப்படத்திற்கு `கிங்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. `Anjaana Anjaani', `War', `Pathaan', போன்ற பல படங்களை இயக்கிய சித்தார் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கியிருக்கிறார். ஷாரூக்குடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷ்ராஃப், ராணி முகர்ஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் சல்மான்கான் ஒரு கேமியோ பாத்திரத்திலும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் இன்னொரு ஸ்பெஷல் என்ன என்றால், இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார் ஷாரூக்கானின் மகள் சுஹானா கான்.
ஜவானின் வெற்றிக்குப் பிறகு அனிருத் - ஷாரூக் கூட்டணி இப்படத்திலும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஷாரூக் நடிப்பில் படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படமும் அடுத்த ஆண்டு தான் வெளியாகவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.