சல்மான் கான் - ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் `சிக்கந்தர்'. ரம்ஜான் ரிலீஸ் ஆக கடந்த மார்ச் 30ம் தேதி வெளியானது. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் இடத்திலும் வரவேற்பு பெறவில்லை. இப்படத்தின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று சல்மான் கான் என பேட்டி ஒன்றில் கூறினார் முருகதாஸ். நேற்று இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சல்மான் கான் அதற்கு பதிலளித்துள்ளார்.
அந்த பேட்டியில் முருகதாஸ் "ஒரு நட்சத்திரத்தை வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. பகல் நேர காட்சிகளை கூட நாங்கள் இரவில்தான் படமாக்க வேண்டி இருந்தது. ஏனென்றால் அவர் (சல்மான் கான்) இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார். அதிகாலையில் இருந்தே படப்பிடிப்பை நடத்துவது எங்களுக்குப் பழக்கமான ஒன்று. ஆனால் அங்கு நிலைமை அப்படி இல்லை. ஒரு காட்சியில் நான்கு குழந்தைகள் நடிப்பதாக இருந்தால், அதிகாலை 2 மணிக்குதான் அவர்களை வைத்து படமாக்க வேண்டியிருக்கும். அது அவர்கள் பள்ளியிலிருந்து திரும்பும் காட்சியாக இருந்தாலும் கூட. அந்த நேரத்தில் அவர்கள் சோர்வடைந்து தூங்கிவிடுவார்கள். கதை உணர்ச்சிகரமானதாக இருந்தாலும், என்னால் அதைச் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை." எனக் கூறி இருந்தார்.
இதற்கு, தற்போது நடந்து வரும் பிக்பாஸ் 19 சீசன் நிகழ்ச்சியில், பதிலளித்திருந்தார் சல்மான் கான் "சமீப காலங்களில் எந்த படத்திலும் நடித்ததற்காக நான் வருத்தப்படவில்லை. சிக்கந்தர் அப்படியான படம் என்கிறார்கள், ஆனால் நான் அதை நம்பவில்லை. படத்தின் கதை நன்றாக இருந்தது. நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன், அது பிரச்னைகளை உருவாக்கியது. இயக்குநர் சொன்னது இதுதான், ஆனால் என் விலா எலும்பு உடைந்திருந்தது. ஆரம்பத்தில் சிக்கந்தர் படம் முருகதாஸ் மற்றும் சஜித் நதியத்வாலாவுடையதாக இருந்தது. ஆனால் பின்னர் சஜித் தப்பித்துக் கொண்டார். முருகதாஸும் மதராசி என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் நடிகர் 6 மணிக்குள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். அது பெரிய படம். சமீபத்தில் அப்படம் வெளியானது. அது சிக்கந்தரை விட மிகப்பெரிய பிளாக்பஸ்டர்." என கூறியிருந்தார். படத்தின் வெற்றி தோல்வி, என்பது ஹீரோ சரியான நேரத்துக்கு வருவதை சார்ந்தது இல்லை. முருகதாஸின் புதிய படத்தில் ஹீரோ சரியான நேரத்துக்கு வந்தார் ஆனாலும் படம் தோல்விதானே என்ற கிண்டலான தொனியில் சல்மான் கான் பேசி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.