கிரிஷ் ஏ டி இயக்கத்தில் நஸ்லென் கஃபூர், மமிதா பைஜூ நடிப்பில் மலையாளத்தில் உருவாகி 2024ல் வெளியான படம் `Premalu'. இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகி பெரிய வரவேற்பை பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் நேரடி மலையாளப்படமாக தமிழ்நாடு, ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களிலும் பெரிய ஹிட் ஆன படம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது எனவும் அறிவித்தனர். தற்போது கிரிஷ் இயக்கத்தில் `பெத்லஹேம் குடும்ப யூனிட்' ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்த படமாக `Premalu 2' இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இருந்து வந்த Premalu படம் திடீரென அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது பிரேமலு தெலுங்குப் பதிப்பு மட்டும் ஆஹா ஓடிடி தளத்தில் உள்ளது.
இதற்கு காரணம் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதே என்று கூறப்படுகிறது. Prem Keetanu எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகனாக வீர் பஹாரியா நடிக்கிறார். ஏற்கெனவே அக்ஷய் குமார் நடித்த Sky Force படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன். நாயகியாக பிரபல தயாரிப்பாளர் சஜித் நாடியாவாலாவின் சகோதரி அஃபீதா நாடியாவாலாவின் மகள் அஃபியா சையத் நடிக்கிறார். இப்படத்தை மனோஜ் பாய் நடித்த `Sirf Ek Bandaa Kaafi Hai' மூலம் கவனம் ஈர்த்த அபூர்வ் சிங் கார்க்கி இயக்க உள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ளது.