Homebound Neeraj Ghaywan
பாலிவுட் செய்திகள்

பெண் என்றால் அவள் `டபுள் தலித்' - சாதிய அவலத்தை உரக்கப்பேசும் Homebound | Neeraj Ghaywan | Oscar

தலித் ஒரு ஆண் என்றால் அவன் தலித். பெண் என்றால் அவள் `டபுள் தலித்' என்ற அவலத்தை பதிவு செய்தது மிக முக்கியமான ஒன்று.

Johnson

சமூக ஏற்றத்தாழ்வுகளை இருவரின் நட்பின் வழி சொல்கிறது `ஹோம்பாண்ட்'


கொரோனா லாக்டவுனுக்கு சில மாதங்கள் முன்பு துவங்குகிறது இந்தக் கதை. மொஹம்மத் ஷையோப் அலி (இஷான் கட்டார்), சந்தன் குமார் (விஷால் ஜத்வா) இருவரும் வட இந்தியாவில் வசிக்கும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். ஷையோபின் அப்பாவுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவை, சந்தனுக்கு ஒரு பக்கம் மேற்கூரை கூட சரி இல்லாத வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டிய கட்டாயம், இன்னொரு புறம் காதலி சுதாவுக்காக (ஜான்வி கபூர்) கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற சூழல். ஒருகட்டத்தில் இந்த இரு நண்பர்களையும் காலம் சூரத்தில் உள்ள ஒரு துணி உற்பத்தி ஆலையில் பணியாட்களாக அமர வைக்கிறது. அந்த வேலை மூலம் இருவரும் தங்கள் வீட்டு தேவைகளை கவனிக்க துவங்க, திடீரென வருகிறது கொரோனா. அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்னவாகிறது?

Homebound

`மஸான்' படத்திற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து நீரஜ் கெய்வான் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம். மேலும் திரைவிழாக்களில் கவனம் பெற்று, 98வது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்டிருக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தது. முதல் படம் போலவே இதிலும் சமூகத்தின் மீதான விமர்சனங்களையும், சாதியமும், மதமும், அரசாங்கமும் மக்களை எப்படி எல்லாம் எள்ளி நகையாடுகிறது என்பதையும் இப்படத்திலும் அழுத்தமாக பேசி இருக்கிறார் நீரஜ். 

Homebound

நடிகர்களாக அத்தனை பேரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். குறிப்பாக விஷால் ஜத்வா. தன்னுடைய வேலை சம்பந்தமான விவரங்களை கேட்க அலுவலகம் செல்லும் ஒரு காட்சியே போதும் அவரது நடிப்பை பற்றி கூற. இஷான் கட்டரும் மிக பிரமாதமான நடிப்பை கொடுத்திருந்தார். பார்ட்டி ஒன்றில் கோபத்தை அடக்கி அங்கிருந்து வெளியேறுவது, நண்பனிடம் உடைந்து அழுவது என பல இடங்களில் சிறப்பு. சில காட்சிகளே வரும் ஜான்வி கபூர், சந்தனின் சகோதரியாக வரும் ஹர்ஷிகா, அம்மாவாக வரும் ஷாலினி, ஷையோப் தாய், தந்தையாக வரும் சுதிப்தா மற்றும் பங்கஜ் தூபே ஆகியோர் கச்சிதமாக நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை பற்றி பேசும் இப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும், ஒவ்வொரு விதத்தில் அவற்றை பிரதிபலிக்கிறது. சாதியின் காரணமாக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை சரி செய்ய, சட்டப்படி கிடைக்கும் சலுகைகளை மற்றவர்கள் கேலி செய்கிறார்கள் என்பதற்காக மறுக்கும் விஷால் ஜத்வா, இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்தினால் தொடர்ந்து பல நெருக்கடிகளுக்கு உள்ளாகும் ஷையோப், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் சமைத்ததை பள்ளி பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்ற கொடுமையை சந்திக்கும் விஷாலின் அம்மா, தன் தந்தைக்கு நேர்ந்தது காதலனுக்கும் நேர கூடாது என நினைக்கும் சுதா என ஒவ்வோரு பாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது.

Homebound

மேலும் சந்தனுக்கும் அவரது சகோதரி வைஷாலிக்கும் இடையே நடக்கும் உரையாடலும் மிக முக்கியமானது. "எனக்கும் படிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால் எப்போதுமே தேர்வு செய்யும் உரிமை உனக்கு மட்டும் தான் இருந்தது சாந்தன்" என அவர் சொல்லும் ஒரு வசனம், பல தரப்பட்ட ஏற்ற தாழ்வுகளை பேசும் இப்படத்தில் ஆண் - பெண் இடையே வீட்டுக்குள்ளேயே நிகழும் ஏற்றத்தாழ்வையும் பளிச் என பேசுகிறது. தலித் ஒரு ஆண் என்றால் அவன் தலித். பெண் என்றால் அவள் `டபுள் தலித்' என்ற அவலத்தை பதிவு செய்தது மிக முக்கியமான ஒன்று.

கொரோனா ஊரடங்கு என்பதன் பின்னால் இருந்த மோசமான திட்டமிடலை, விமர்சனமாகவோ, வசனமாகவோ சொல்லாமல், வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைபயணமாக சென்ற அந்த நிஜத்தை காட்டியது தீவிரமான வலியை தரக்கூடியதாக இருந்தது. 

கிராமத்து காட்சி, நகரத்து காட்சி என இடம்விட்டு இடம் மாறினாலும், பிரதீக் ஷா தன் ஒளிப்பதிவின் மூலம் உணர்வுகளை தவற விடக்கூடாது என கவனமாக பணியாற்றியிருக்கிறார். நரேன் சந்திராவார்கர் - பெனடிக்ட் டெய்லர் பின்னணி இசையும், அமித் த்ரிவேதி பாடல்களும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

ஒரு சினிமா என்பதை தாண்டி, நூற்றாண்டுகளாக தொடரும் சாதிய கொடுமைகளை பதிவு செய்வதும், கொரோனா என்ற சூழலை கையாளத் தெரியாத அமைப்பின் வரலாற்றுப் பிழையை பதிவு செய்வதுமாக முக்கியமான ஒரு ஆவணமாக தனித்து தெரிகிறது இந்த `ஹோம்பவுண்ட்'.