பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) காலமானார். ஹீரோவாக பல ஆண்டுகள் கொடிகட்டி பறந்தவர், தன் கடைசி மூச்சு வரை நடிப்பை மட்டுமே சுவாசித்தவர்தான் பாலிவுட்டின் ’ஹீ மேன்’ என செல்லமாக அழைக்கப்பட்ட தர்மேந்திரா.
பாலிவுட்டின் பொற்காலமாக கருதப்படும் 60களில் இருந்து 90 காலகட்டம் பல ஆளுமைகளை கொண்டது. அப்படியான அடையாளங்களில் ஒருவர் தர்மேந்திரா. பன்முக நடிப்பு, வசீகரமான முகம், சிறப்பான திரை ஆளுமை என தர்மேந்திராவுக்கு பல அடையாளங்கள் உண்டு.
வலிமையான உடலமைப்பு, ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகள், எளிமையான உடல்மொழியும் பாவனைகளும் என தர்மேந்திரா எனும் நபரை பற்றி யோசிக்கும் போது அவரை அறிந்த பலரது நினைவுக்கும் வரும். ஒரு வகையில் இவை எல்லாம்தான் 6 தசாப்தங்களாக இந்தி திரையுலகை அவர் ஆட்சி செய்ய காரணமும் கூட.
தர்மேந்திரா பிறந்தது பஞ்சாப்பில் உள்ள நஸ்ராலி என்ற கிராமம். அவரின் தந்தை கேவல் கிருஷ்ணன் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றாலும், படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாமல் சினிமா நோக்கி தன் ஆர்வத்தை வளர்த்தார். ஃபிலிம்பேர் பத்திரிகை நடத்திய திறமை வேட்டையில் வெற்றி பெற்றவருக்கு நம்பிக்கை பிறக்க, பஞ்சாபில் இருந்து மும்பைக்கு பயணப்பட்டார். திரையுலகில் அடியெடுத்து வைக்கும் முன்னரே குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் 19 வயதிலேயே அவருக்கு பிரகாஷ் கௌருடன் திருமணம் நடந்து முடிந்திருந்தது. 1960ஆம் ஆண்டு தனது 24ஆவது வயதில் ’தில் பி தேரே ஹம் பி தேரே’ (Dil Bhi Tera Hum Bhi Tere) என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தரம் சிங் தியோல் என சிறுவயதில் அறியப்பட்டவர், தர்மேந்திராவாக அரிதாரம் பூசி, திரையுலகின் புதிய நாயகனாக அவதாரம் எடுத்தார்.
`ஷோலா அவுர் ஷபனம்' (Shola Aur Shabnam), `அன்பத்' (Anpadh), `பிந்தி' (Bandini), `சீதா ஆர் கீதா' (Seeta Aur Geeta), `சுப்க்கே சுப்க்கே' (Chupke Chupke), `தரம்வீர்' (Dharam Veer) என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் கொடுத்தார். ஒரு நடிகர் 6 தசாப்தங்களாக திரைப்பயணத்தை தொடர்வதும், ஹீரோவாக 74 படங்கள் ஹிட் கொடுத்ததும் யாருக்கும் அமையாத ஒன்று. இன்றுவரை அவரும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்து 1975ல் வெளியான ’ஷோலே’ இந்திய சினிமாவில் மாபெரும் மைல்கல் படமாக மாறியது. எல்லா மொழியினரும் இப்போதுவரை கொண்டாடும் ஒரு காவியப்படமாக இருக்கிறது.
70கள் தர்மேந்திராவின் பிரபலம் உச்சத்துக்கு சென்ற காலகட்டம். சில படங்கள் தோல்வி என்றாலும் பல படங்கள் மிகப்பெரிய ஹிட். அதுவரை ரொமான்ஸ் படங்களாக வந்து கொண்டிருந்த பாலிவுட் சினிமா கலாச்சாரத்தை மாற்றியது தர்மேந்திரா நடித்து ஹிட்டான `மேரா கோன் மேரா தேஷ்' (Mera Gaon Mera Desh). தர்மேந்திராவையும் அந்தப் படம் ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜுக்கு கொண்டு சென்றது. 1987ஆம் ஆண்டில் மட்டும், இவர் தொடர்ச்சியாக 7 வெற்றிப் படங்களையும், மொத்தமாக 9 வெற்றிப் படங்களையும் கொடுத்து, இன்றுவரை முறியடிக்கப்படாத ஒரு சாதனையைப் படைத்துள்ளார். ஹிந்தியில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள தர்மேந்திரா, தம் தாய்மொழியான பஞ்சாபியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவற்றை தொடர்ந்து பெங்காலி, போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
90களுக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கியவர், அதிலும் தன்னுடைய தனி பாணியிலான நடிப்பால் கவர்ந்தார். சினிமாவை மட்டுமே தன் வாழ்க்கை என நினைத்த தர்மேந்திரா தொடர்ச்சியாக நடித்துக் கொண்டேதான் இருந்தார். அவர் படங்கள் வராத ஆண்டுகள் 2005, 2006, 2008, 2009, 2010, 2012 இந்த ஆறு வருடங்கள் மட்டுமே. 65 ஆண்டுகளில் 6 ஆண்டுகள் தவிர மற்ற எல்லா வருடங்களிலும் அவர் படம் வந்து கொண்டே இருந்தன. அவர் நடித்துக் கொண்டே இருந்தார். இப்போதும் கூட அவர் நடித்து முடித்த `இக்கிஸ்' டிசம்பர் 25 வெளியாக தயாராக இருக்கிறது. அவரே மறைந்தாலும், மக்களை மகிழ்விப்பதில் தவறிவிடக் கூடாது என தன் கடைசி ஞாபகம் ஒன்றை விதைத்து தான் சென்றிருக்கிறார்.
தர்மேந்திரா-பிரகாஷ் கவுர் தம்பதிக்கு பிறந்தநான்கு மகன்களில் சன்னி தியோல், பாபி தியோல் ஆகிய இருவரும் இப்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள். இரண்டாவதாக நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்து அவர்களுக்கு இஷா தியோல், ஆஷானா தியோல் என்ற இரு மகள்கள். இதில் இஷா தியோல் நடிகை.
சினிமாவில் தர்மேந்திரா ஆற்றிய பங்களிப்புக்காக, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது 2012ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அரசியல் களத்தையும் தர்மேந்திரா விட்டுவைக்கவில்லை. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ராஜஸ்தானின் பிகானுர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்படியான ஒரு திரைப்பயணத்தை மேற்கொண்ட தர்மேந்திரா இன்று நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். கலையுலகம் கண்ட எத்தனையோ ஜாம்பவான்களில் தர்மேந்திராவும் முக்கியமான ஒருவர் என்பது மட்டும் உறுதி.