இந்திய சினிமாவில் முக்கியமான சினிமா ஆளுமை அனுராக் காஷ்யப். இவர் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் நடித்துள்ள `Kennedy' நேரடியாக ஸீ5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 20ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அவர் குடிக்கு அடிமையானது பற்றியும், பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து `Kennedy' படத்தை எடுத்தது பற்றியும் பகிந்துள்ளார்.
அந்தப் பேட்டியில் "சுகேது மெஹ்தா" எழுதி 2004ல் வெளியான Maximum City: Bombay Lost and Found புத்தகத்தை அடிப்படையாக வைத்து சீரிஸ் உருவாக்க விரும்பினேன். அதற்கான முயற்சிகளில் 2009லிருந்து ஈடுபட்டேன். ஒருவழியாக 2019ல் நெட்ஃபிளிக்ஸ் இதனை தயாரிக்க பச்சைக்கொடி காட்டினர். அப்போது நான் அவர்களிடம் 'தயவுசெய்து புத்தகத்தைப் படியுங்கள்' என்று சொன்னேன். குழுவில் ஒருவரைத் தவிர வேறு யாரும் புத்தகத்தைப் படிக்கவில்லை. ஆரம்ப கட்ட ஒப்பந்தத்துக்கு பின்னர் நீண்டகால நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது. அந்த குழு புத்தகத்தின் முதல் 15 பக்கங்களுக்குள்ளாகவே ஒரு சிக்கலைக் கண்டறிந்தது. ஒன்றரை ஆண்டுகளாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இது இனி நடக்காது என்பதை கூட அவர்கள் எனக்கு சொல்லவில்லை. அதுதான் என்னை அதிகமாக கோபப்படுத்தியது. நான் என் கதைகளை கைப்பட எழுதும் நபர், மொத்தமாக 900 பக்கங்களை கொண்ட ஸ்கிரிப்டை முடித்திருந்தேன். பின்னர் நெட்ஃபிளிக்ஸ் தலைமை அதிகாரியுடன் பேசி சுமூகமாக அந்த பிரச்சனையை முடித்து, அந்த புராஜெக்டும் கைவிடப்பட்டது.
ஆனாலும் அதைப் பற்றிய துக்கம் எனக்குள்ளேயே இருந்தது, தெரப்பி செல்லும் வரை அது எனக்குத் தெரியாது. நீங்கள் எதிலாவது அதிக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது, அது உங்கள் குழந்தையாக மாறும். அதை இழக்கும் போது கருச்சிதைவை போன்றதாக இருக்கும். இந்த துக்கத்தின் காரணமாக எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்ய blood thinners பயன்படுத்தினேன். ஒரு தடுப்பூசி மோசமாக எதிர்வினையாற்றியது, எனக்கு ஆஸ்துமா வந்தது, அதனால் நான் ஸ்டீராய்டுகளை எடுத்துக் கொண்டேன். இதன் பிறகு நான் குடிக்க ஆரம்பித்தேன், என் குடிப்பழக்கம் மிகவும் மோசமானது. என் மகளின் வற்புறுத்தல் மற்றும் என்னுடைய மனம் சொன்னதை கேட்டு, நான் சரி செய்து கொள்ள மறுவாழ்வு மையத்திற்குச் சென்றேன். என்னை சரி செய்து கொண்டேன். ஆனால் அந்த சமயம் எனது காலில் காயம் அடைந்து பல மாதங்களாக படுக்கையில் இருதேன். ஏற்கெனவே, blood thinners எடுத்துக் கொண்டதால் அறுவை சிகிச்சை ஒரு தேர்வாக இல்லை. அந்த சமயத்தில் தான் அதிர்ஷ்டவசமாக, சோயா அக்தர் என்னை அழைத்தார். ' மேட் இன் ஹெவனில் நீங்கள் நடிப்பீர்களா?' என்று கேட்டார், பின்னர் விஷால் பரத்வாஜ் ஒரு குறும்படத்தில் நடிக்க அழைத்தார். அதன் காரணமாக நான் வெளியே செல்ல ஆரம்பித்தேன்.
அடுத்த அடி என்னுடைய தனிமை. ஏனெனில் என் மகள் தனது துணையுடன் வாழ்க்கையைத் தொடங் வீட்டை விட்டு வெளியேறினார். நான் வீட்டில் தனியாக இருந்தேன், தினமும் Tchaikovsky ஓடவிட்டு, விஸ்கி குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது மேசையில் வைத்திருந்த வெற்று காகிதத் தாள்கள் தொடர்ந்து என்னை அழைத்தன. அப்போதுதான் `கென்னடி' பிறந்தான், அது இறுதியாக என் துக்கத்திலிருந்து மீள உதவியது. நான் அதிலிருந்து வெளியே வந்தேன், கென்னடியை எழுதினேன். அது ஒரே இரவில் நடந்தது. ஒரே இரவில் 55 பக்க ஸ்கிரிப்டை எழுதினேன்." எனக் கூறியுள்ளார் அனுராக் காஷ்யப். கென்னடி முதன்முதலில் 2023 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, அதன் பிறகு அது டிசம்பர் 10, 2025 அன்று லெட்டர்பாக்ஸ் வீடியோ ஸ்டோரில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது. இப்போது பிப்ரவரி 20 ZEE5 இல் வெளியிடப்பட உள்ளது.