பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, நவம்பர் 24ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இன்று அவரது 90வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவரது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி தனது கணவர் குறித்து பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் "தரம் ஜி, என் அன்பான இதயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் என் மனதை உடைத்து விட்டு போய் இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது, மெதுவாக உடைந்த துண்டுகளை சேகரித்து என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறேன், நீங்கள் எப்போதும் என்னுடைய ஆன்மாவில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். நாம் ஒன்றாக வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகளை ஒருபோதும் அழிக்க முடியாது, அந்த தருணங்களை மீண்டும் அனுபவிப்பது எனக்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
உங்கள் பிறந்தநாளில், நாம் ஒன்றாக இருந்த அழகான ஆண்டுகளுக்கும், ஒருவருக்கொருவர் அன்பை மீண்டும் உறுதிப்படுத்தும் நம் இரண்டு அழகான பெண்களுக்காகவும், என் இதயத்தில் என்னுடன் இருக்கும் அனைத்து அழகான, மகிழ்ச்சியான நினைவுகளுக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் பணிவு, நல்ல இதயம் மற்றும் மனிதர்கள் மீதான உங்கள் அன்புக்காக, உங்களுக்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியின் செல்வத்தை வழங்க கடவுளிடம் எனது பிரார்த்தனைகள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே. எங்கள் மகிழ்ச்சியான 'ஒன்றாக' தருணங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.