பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89). 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து வைத்திருப்பவர். ஆரம்ப காலத்தில் 60களில் இருந்து 90கள் வரை கொடிகட்டி பறந்தவர், தற்போது வரை சினிமாவில் நடித்துக் கொண்டே இருந்தார். இவர் சமீபத்தில் நடித்து முடித்த `இக்கிஸ்' டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
வயது மூப்பு பிரச்சனைகளையும் தாண்டி தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் தர்மேந்திராவுக்கு நேற்று திடீரென சுவாசக் கோளாறு காரணமாக மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. திடீரென இன்று காலையில் இருந்து நடிகர் தர்மேந்திரா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாத பல ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பானது.
இதனை தொடர்ந்து தர்மேந்திராவின் மகளும் நடிகையுமான ஈஷா தியோல் "ஊடகங்கள் மிகைப்படுத்தி பொய்யான செய்திகளைப் பரப்புவது போல் தெரிகிறது. என் தந்தை சீரான நிலையிலும், மீண்டு வந்தும் கொண்டிருக்கிறார். எங்கள் குடும்ப தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்பா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்ததற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
தர்மேந்திராவின் மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி "நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்கு பலன் பெற்று குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி தவறான செய்திகளை, பொறுப்பான சேனல்கள் எப்படி பரப்புகின்றன? இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல்படுவதாகும். தயவுசெய்து குடும்பத்திற்கும் அதன் தனியுரிமைக்கான தேவைக்கும் உரிய மரியாதை கொடுங்கள்" என தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த தர்மேந்திரா, 1954-ம் ஆண்டு தனது 19 வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை மணந்தார். இந்த தம்பத்திக்கு சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் விஜேதா மற்றும் அஜீதா என்ற இரு மகள்கள் உள்ளனர். அதன் பிறகு திரைப்படத் துறையில் நுழைந்த பின் நடிகை ஹேமா மாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஈஷா தியோல், அஹானா தியோல் என்ற இரு மகள்கள் உள்ளனர். மனைவி ஹேமா மாலினி மற்றும் 6 பிள்ளைகளுடன் வசித்து வந்த தர்மேந்திரா, வயது முதிர்வு காரணமாக சில உடல்நலப் பிரச்னைகளை எதிர்க்கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.